பக்கம் எண் :

36. வஞ்சி

1வாடாவஞ்சி தலைமலைந்து
கூடார்மண் கொளல்குறித்தன்று.

(இ - ள்.) தோலாத வஞ்சியைத் தலையிலே சூடிப் பகைவர் பூமியைக் கொள்கையைக் கருதியது எ - று.

வ - று. செங்கண் மழவிடையிற் றண்டிச் சிலைமறவர்
2வெங்கண் மகிழ்ந்து விழவமர- அங்குழைய
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக்
குஞ்சி மலைந்தானெங் கோ.

(இ - ள்.) சிவந்தகண்ணினையுடைய இளமைப்பருவத்து ஆனேற்றையொப்ப மிகைத்தெழுந்து வில்லினையுடைய வீரர் வெவ்விய மதுவையருந்தி வில்விழாவை விரும்ப, அழகிய தளிரினையுடைய வஞ்சியைத் தன்னைப் பணியாதாரைப் பணிவிப்பான் வேண்டிச் சுரும்பு ஆரவாரிப்ப மயிரிலே சூடினான், எம்முடைய வேந்து எ - று.

வணங்காரை வணக்கிய வேந்து சூடினானென்க.

(1)

37. வஞ்சியரவம்

வள்வார் முரசமொடு வயக்களிறு முழங்க
ஒள்வாட் டானை யுருத்தெழுந் தன்று.

(இ - ள்.) வலியினையுடைய வாராலேவிசித்த வீரமுரசுடனே வலிய யானை முழங்க அழகிய வாளினையுடைய சேனை கோபித்துக் கிளர்ந்தது எ - று.

வ - று. பௌவம் பணைமுழங்கப் பற்றார்மண் பாழாக
வௌவிய வஞ்சி வலம்புனையச் - செவ்வேல்
ஒளிறும் படைநடுவ ணூழித்தீ யன்ன
3களிறுங் களித்ததிருங் கார்.

(இ - ள்.) கடல்போல வீரமுரசம் ஆர்ப்பப் பகைவர்நிலம் அழியக் கைப்பற்றின வஞ்சியை வெற்றியாகச் சூடச் சிவந்தவேல் விட்டுவிளங்கும் சேனை நடுவே யுகாந்தகாலத்து நெருப்பையொத்த யானையும் மகிழ்ந்து முழங்காநின்றது, மேகத்தைப்போல எ - று. உம்மை : சிறப்பும்மை.

(2)

38. குடைநிலை

4பெய்தாமஞ் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக்
கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று.


1. மணி. 19: 119-20. 2. புறநா. 129: 2. 3. பரி. 8 : 17-8; அகநா: 114 : 12; 12-3; புறநா. 81; 1-2; குறிஞ்சி. 162-5; நன். சூ. 458, மயிலை. மேற். 4. சிலப்.5: 89-93 ,அடியார். மேற்.