பக்கம் எண் :

(இ - ள்.) பொய்ம்மைநீங்க நாடோறும் கீர்த்தியுண்டாக்குதல், என்ன அதிசயமாம், பூமியைமறைத்த தெளிந்துகறங்கும் உகாந்த வெள்ளம் விட்டு நீங்க, முற்பட மலைதோன்றிப் பூமிதோன்றாத அளவிலே வாளுடனே எல்லாரிலும் முற்பட மலையிடத்திலே தோன்றிப் பழையதாகிய குடி! எ - று.

குடி புகழ்விளைத்தல் என்னவியப்பாம்.1 எவனென்பது என்னெனக் குறைந்து நின்றது. மூத்தகுடியென்றது பூசலிலே வாளாலே பட்ட குடியென்பாருமுளர்.

(14)

கரந்தைத்திணைப்பாட்டு ஒன்றும் துறைப்பாட்டுப் பதின்மூன்றும் முடிந்தன.

இரண்டாவது கரந்தைப்படலம் முற்றிற்று.


மூன்றாவது
வஞ்சிப்படலம்
(சூத்திரம் 3.)

வாடா வஞ்சி வஞ்சி யரவம்
கூடார்ப் பிணிக்குங் குடைநிலை வாணிலை
கொற்றவை நிலையே கொற்ற வஞ்சி
குற்றமில் சிறப்பிற் கொற்ற வள்ளை
5பேராண் வஞ்சி மாராய வஞ்சி
நெடுமொழி வஞ்சி முதுமொழி வஞ்சி
உழபுல வஞ்சி மழபுல வஞ்சி
கொடையின் வஞ்சி குறுவஞ் சிய்யே
ஒருதனி நிலையொடு தழிஞ்சி பாசறை
10 பெருவஞ் சிய்யே பெறுஞ்சோற்று நிலையொடு
நல்லிசை வஞ்சியென நாட்டினர் தொகுத்த
எஞ்சாச் சீர்த்தி யிருபத் தொன்றும்
வஞ்சியும் வஞ்சித் துறையுமாகும்.

என்-னின், வஞ்சித்திணையும் துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வஞ்சி, வஞ்சியரவம், குடைநிலை, வாணிலை, கொற்றவைநிலை, கொற்றவஞ்சி, கொற்றவள்ளை, பேராண்வஞ்சி, மாராயவஞ்சி, நெடுமொழிவஞ்சி, முதுமொழிவஞ்சி, உழபுலவஞ்சி, மழபுலவஞ்சி, கொடைவஞ்சி, குறுவஞ்சி, ஒருதனிநிலை, தழிஞ்சி, பாசறைவஞ்சி, பெருவஞ்சி, பெருஞ்சோற்றுநிலை, நல்லிசைவஞ்சி என இவை இருபத்தொன்றும் வஞ்சித்திணையும் துறையுமாம் எ - று.


(பி.ம்.) 1. 'என்னவென்பது'