அடுமுரணாறினார்-பட்டார்; 'முரணாறினாரன்றி' என்பதற்கு முரணாறாதென்றுமாம். 114. முதுவுழிஞை வேய்பிணங்கிய மிளையரணம் பாய்புள்ளிற் பரந்திழிந்தன்று. (இ - ள்.) மூங்கில் தலைமணந்த காவற்காட்டினையுடைய குறும்பிலே இரைகண்டு பாயும் பறவையொப்ப வீரர் கைவளர்ந்து குதித்தது. எ - று. வ - று.1கோடுயர் வெற்பி னிலங்கண் டிரைகருதும் தோடுகொள் புள்ளின் 2றொகையொப்பக் -கூடார் முரணகத்துப் பாற முழவுத்தோண் மள்ளர் அரணகத்துப் பாய்ந்திழிந்தா ரார்த்து. (இ - ள்.) குவடோங்கின மலையினின்றும் இரையைப் பூமியிலே கண்டு கருதிப் பாயும் தொகுதிகொண்ட பறவையின் குழுவையொப்பப் பகைவர் மாறுபாடு தம் மனத்தே கெட முழவுபோலத் திரண்ட தோளையுடைய வீரர் அரணிடத்துப்பாய்ந்து இழிந்து ஆரவாரித்தார் எ - று. (20) 115. இதுவுமது செருமதிலோர் சிறப்புரைத்தலும் அருமுரணா னத்துறையாகும். (இ - ள்.) போரைச் செய்யும் எயிலினுள்ளோருடைய மிகுதியைக் கூறலும் வெல்லுதற்கரிய மாறுபாட்டாலே முன்புசொன்ன துறையேயாம். எ - று. வ - று. அறியார் வயவ ரகத்திழிந்த பின்னும் நெறியார் நெடுமதிலு ணேரார்-மறியாம் கிளியொடு நேராங் கிளவியார் வாட்கட் களியுறு காமங் கலந்து. (இ - ள்.) உணரார் நொச்சிவீரர்; அரணினுள்ளே புகுந்தபின்னும், முடங்குதல் நிறைந்த நெடும்புரிசையுட் பகைவர், மான்மறியாம் கிளியை யொத்த சொல்லினையுடையார் ஒளியினையுடைய கண்ணின் களிப்புற்ற வேட்கை விரவுதலான். எ - று. நேரார்மதிலகத்து இழிந்தபின்னும் வயவரறியார் எனவும், மறியாம் வாட்கண் எனவும் கூட்டுக. (21) 116. அகத்துழிஞை முரணவியச் சினஞ்சிறந்தோர் அரணகத்தோரை யமர்வென்றன்று.
1. தொல். புறத் . சூ. 11, இளம். மேற். (பி-ம்)2. 'றொகையேய்ப்ப' |