(இ - ள்.) அழகிய 1தழையாற் சிறந்த நிதம்பத்தினையும் அசையும் மூங்கில்போன்ற மெல்லியதோளினையும் பசுந்தளிர்போன்ற நிறத்தினையும் கொண்டாடித் தமப்பனுடைய மதிற்புறத்துத்தங்கும் தனிமையையே கொடா நிற்கும்; வீரமே தனக்குப் புரிசையாகவுடைய வேந்தனிடத்து மகள் எ - று. (29) 124. திறைகொண்டு பெயர்தல் அடுதிற லரணத் தரசு வழிமொழியப் படுதிறை கொண்டு பதிப்பெயர்ந் தன்று. (இ - ள்.) கொல்லும் வலிமிகும் எயிலினிடத்து மன்னரெல்லாம் தாழ்வு சொல்ல முறைமையான திறையைக் கொண்டு இருந்த ஊரினின்றும் எடுத்துவிட்டது. வ - று. கோடும் வயிரு மிசைப்பக் குழுமிளை ஓடெரி வேய வுடன்றுலாய்ப்-பாடி உயரந்தோங் கரணகத் தொன்னார் பணியப் பெயர்ந்தான் பெருந்தகையி னான். (இ - ள்.) சங்கும் கொம்பும் முழங்கச் செறிந்த குறுங்காட்டைப் பரந்த எரிமூடக் கோபித்துக் கிளர்ந்து பாடிவீட்டினின்று மிக உயர்ந்த எயிலிடத்துப் பகைவர்தாழ எடுத்து மீளவிட்டான், மிக்க அழகினையுடையான் எ - று. (30) 125. அடிப்பட விருத்தல் பேணாதார் மறங்கால ஆணைகொண் டடிப்படவிருந்தன்று. (இ - ள்.) பகைவர்தாம் சினத்தை உமிழத் தன் ஆணையை ஏற்றுக் கொண்டு நாடுவழிப்பட நெடுங்காலம் இருந்த இருப்பிலே இருந்தது எ - று. வ - று. ஒன்றி யவர்நா டொருவழித்தாய்க் கூக்கேட்ப 2வென்றி விளையா விழுமதிலோர்-என்றும் பருந்தார் செருமலையப் பாடி பெயரா திருந்தா னிகன்மறவ ரேறு. (இ - ள்.) பொருந்திய பகைவர்தேசம் ஒருவழிப்பட்டு ஏவல்கேட்பத் தங்கள் வெற்றியைத் தங்கள் பக்கல் உண்டாக்கமாட்டாத சீரிய அரணிடத்தோர் எந்நாளும் பருந்துநிறையும் பூசலைச் செய் யாநிற்பப் பாசறையை விட்டு நீங்காது அவ்விருப்பிலேயேயிருந்தான், மாறுபாட்டாற் சிறந்த வீரருக்கு இடியேறனையான் எ - று. (3)
1. தழை-செங்கழுநீர்ப்பூ முதலியவற்றால் தொடுத்து இளையமகளிரணியும் உடைவிசேடம்; முருகு: 201-4; ஐங்குறு. 72; புறநா. 61: 1, 116: 1-2, 248: 1-2, 340: 1, 341: 2 2. நன். சூ.451, மயிலை. மேற். |