பக்கம் எண் :

(இ - ள்.) தும்பை, தும்பையரவம், தானைமறம், யானைமறம், குதிரை மறம், தார்நிலை, தேர்மறம், பாண்பாட்டு, இருவருந்தபுநிலை, எருமை மறம், ஏமவெருமை, நூழில், நூழிலாட்டு, முன்றேர்க்குரவை, பின்றேர்க்குரவை, பேய்க்குரவை, களிற்றுடனிலை, ஒள்வாளமலை, தானை நிலை, வெருவருநிலை, சிருங்காரநிலை, உவகைக்கலுழ்ச்சி, தன்னைவேட்டல், தொகைநிலையென இருபத்துநான்கும் தும்பைத்திணையும் துறையுமாம் எ - று.

127. தும்பை

செங்களத்து மறங்கருதிப்
பைந்தும்பை தலைமலைந்தன்று.

(இ - ள்.) குருதியாற் சிவந்த களத்து மாறுபாட்டை நினைந்து பசுந்தும்பையாகிய 1போர்ப்பூவை முடியிடத்துச் சூடியது எ - று.

வ - று. கார்கருதி நின்றதிருங் கௌவை விழுப்பணையான்
சோர்குருதி சூழா நிலநனைப்பப் - போர்கருதித்
துப்புடைத் தும்பை மலைந்தான் றுகளறுசீர்
வெப்புடைத் தானையெம் வேந்து.

(இ - ள்.) மேகத்தை ஒப்புக்குறித்து ஒழியாதுநின்று முழங்கும் ஆரவாரத்தாற் சிறந்த சீரிய வீரமுரசினையுடையான், ஒழுகுங்குருதி சூழ்ந்து பொருகளத்தை நனைப்பப் பூசலை நினைந்து வலியையுடைய தும்பை மாலையைச் சூடினான்; குற்றந்தீர்ந்த புகழினையும் வெம்மை மிக்க சேனையினையும் உடைய எம் மன்னன் எ - று .

(1)

128. தும்பை அரவம்

பொன்புனைந்த கழலடியோன்
தன்படையைத் தலையளித்தன்று.

(இ - ள்.) அழகணிந்த வீரக்கழற்காலினையுடையான் தனது சேனையைத் தலையளி பண்ணியது எ - று.

வ - று.2வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண்ணடையும்
கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் - பல்புரவி
நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப்
பன்மணிப் பூணான் படைக்கு.

(இ - ள்.) போர்வெல்லும் அடையாளமும் 3பற்றும் சிறந்ததனமும் மருத நிலமும் கொல்லும் யானையும் குதிரையும் வழங்கி அருள்செய்தான்.


1. போர்ப்பூ : பு - வெ . 241; மதுரைக். 596, ந. 2. குறள். 762, பரிமேல் . வி. 3. பற்று - பல ஊர்களையுடைய சிறுநாடு.