பக்கம் எண் :

பல பரியினையும் நல்ல மணிமிடைந்த திண்ணிய தேரினையுமுடைய பகைஞர் அஞ்சித் தலைநடுங்க, நவமணி அழுத்தின ஆபரணத்தினையுடையான், சேனைக்கு எ - று .

(2)

129. தானை மறம்

தாம்படைத் தலைக்கொள்ளாமை
ஓம்படுத்த வுயர்புகூறின்று.

(இ - ள்.) பொர எதிர்ந்த இருவகைச்சேனை தாம் பொருதுமடியாமை பரிகரித்த ஆற்றலினது உயர்ச்சியைச் சொல்லியது எ - று.

வ - று. கழுதார் பறந்தலைக் கண்ணுற்றுத் தம்முள்
இழுதார்வேற் றானை யிகலிற் - பழுதாம்
செயிர்காவல் பூண்டொழுகுஞ் செங்கோலார் செல்வம்
உயிர்காவ லென்னு முரை.

(இ - ள்.) பேய்மிக்க போர்க்களத்தைக் கிட்டித் தம்மில் தாம் நெய்யணிந்த வேற்படை மாறுபடிற் குற்றமாம்; குற்றத்தை உலகிற் புகுதாமற் காத்து நடக்கும் நீதியையுடைய மன்னர்தம் செல்வமாவது பல உயிரையும் காத்தலென்றறிந்து சொல்லும் சொல் எ - று.

உரை பழுதாம் . இகலின் இருவரரசர்சேனையும் தோலாது மடியும் . இனி ஒருவன்சேனை தம்முள் மாறுபடுதலென்றுமாம் .

(3)

130. இதுவுமது

பூம்பொழிற் புறங்காவலனை
ஓம்படுத்தற்கு முரித்தெனமொழிப.

(இ - ள்.) பொலிவுபெற்ற பூமிகாவலற்கு உறுதி கூறுதற்கும் பெறும் அதுவென்று சொல்லுவர் எ - று.

வ - று. வயிர்மேல் வளைஞரல வைவேலும் வாளும்
செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி - உயிர்மேற்
பலகழியு மேனும் பரிமான்றேர் மன்னர்க்
குலகழியு மோர்த்துச் செயின்.

(இ - ள்.) கொம்போசையின் மேற்படச் சங்கு முழங்கக் கூர்த்த வேலும் வாளும் போரிடத்து நெருப்புப்பரப்ப வெகுண்டு உயிரிடத்துக் கொலைக் குற்றம் பலகழியுமாயினும் செலவையயர்ந்த குதிரையாற் பூட்டப்பட்ட தேர் வேந்தர்க்கு விசாரித்துச்செய்யின் பூமியழியும் எ - று.

படைபடும், கெடுமென்று ஓராது பூசல் செய்யவேண்டும் .

(4)

131. இதுவுமது

வேற்றானை மறங்கூறி மாற்றார தழிபிரங்கினும்
ஆற்றி னுணரி னத்துறை யாகும்.