(இ - ள்.) விண்ணிடத்து வேந்தன் சென்றானாக,வாளே சுருவமாக அபிமானம் ஓமநெய்யாக மறமே சமிதையாகவண்டுபரக்கும் மது மலர்ந்த மாலையினையும் வீரக்கழலினையுமுடையவெவ்வியோன் வாட்போராகிய ஒள்ளிய தீயுள் உயிரைஆகுதிபண்ணினான் எ-று. (26) 153. இதுவுமது காய்கதிர் நெடுவேற் கணவனைக்காணிய ஆயிழை சேறலு மத்துறை யாகும். (இ - ள்.) பகையைச் சீக்கும் ஒளிநெடுவேலினையுடையகொழு நனைக்காணவேண்டி அவன்பட்ட போர்க்களத்துள்அழகிய ஆபரணத்தையுடைய மனையாள் போயினதும் அத்துறையேயாம் எ-று. (வ - று.) கற்பின் விழுமிய தில்லை 1கடையிறந் திற்பிறப்பு நாணு மிடையொழிய - நற்போர் அணங்கிய வெங்களத் தாருயிரைக் காண்பான் வணங்கிடை தானே வரும். (இ - ள்.) கற்புடைமையிற் சீரியதொன்றில்லை; வாயிற்கடை நீங்கிக் குடிப்பிறப்பும் நாணமும் தன்னிடத்தைவிட்டு நீங்க நல்ல பூசலிற்பட்ட சேனைப்பரப்பிற்கிடந்ததன்னுயிரனையவனைக் காணவேண்டி நுடங்கும் இடையாள்தமியளாய் வரும் எ-று. ஒழியத் தானே வருமென்க. (27) 154. தொகைநிலை அழிவின்று புகழ்நிறீஇ ஒழிவின்று களத்தொழிந்தன்று. (இ - ள்.) கேடின்றியே நிறையக் கீர்த்தியை நிறுத்தி எல்லாரும் போர்க்களத்திலே மடிந்தது எ-று. (வ - று.) மண்டமர்த் திண்டோண் மறங்கடைஇமண்புலம்பக் கண்டிரள்வேன் மன்னர் களம்பட்டார் - பெண்டிர் கடிதெழு செந்தீக் கழுமினா ரின்னும் கொடிதேகா ணார்ந்தின்று கூற்று. (இ - ள்.) உறுபோரிடத்துத் திண்ணியதோளால் மாறுபாட்டைக் கடாவிப் பூமி தனிமைப்பட்டுப்புலம்பக்காம்பு கண்திரண்ட வேலினையுடைய வேந்தரிருவரும் போர்களத்துப் பட்டார்; அவர்தேவிய ரெல்லாம் கடிதாயெழும் செந்நெருப்பிற் கழுமினார்; இன்னமும்கொடுமையுடைத்தே காண், வயிறு நிறைந்தின்று கூற்றம் எ-று. (28) திணைப்பாட்டு ஒன்றும் துறைப்பாட்டுஇருபத்தேழும் முடிந்தன. ஏழாவது தும்பைப் படலம்முற்றிற்று.
(பி - ம்) 1. 'கடைதுறந்' |