124தொன்னூல்விளக்கம்
     (இ-ள்.) மருதக் கருப்பொருளா மாறுணர்த்துதும். இந்திரன் றெய்வமே; ஊரனுங்
கிழவனுங் கிழத்தியு மனைவியுந் தலைவனொடு தலைவியே; உழவரு முழத்தியருங்
கடையருங் கடைச்சியருங் குடியே; கொக்கு மன்றிலும் நாரையு மன்னமும் போதாவுங்
கம்புளுங் குருகுந் தாராவும் பறவையே; எருமையும் நீர்நாயும் விலங்கே; பேரூரு மூதூரு
மூரே; யாறு நீரே; மகிழுந் தாமரையுங் கழுநீருங் குவளையுங் காஞ்சியும் வஞ்சியு
மருதமு மலரே மரமே; செந்நெல்லும் வெண்ணெல்லு முணாவே; கிணையு மனப்பறையும்
பறையே; மருதயாழ் யாழே; மருத மிசைப்பாட்டே; திருவிழா வழங்கலும் வயலிற்
களைகட்டலு நெல்லை யறுத்தலுந் தெளித்தலுங் குள நீராடலும் யாற்றுநீர் குளித்தலுந்
தொழிலே; என விப்பதினான்கு மருதக் கருப்பொருளா மெனக்கொள்க. எ-று. (6)
 

180.

நெய்தற் கருப்பொரு ணீராள் வருணனே
மொய்திரை சேர்ப்பன் முன்னீர் புலம்பன்
பரத்தி நுளைச்சி பரதர் பரத்தியர்
நுளையர் நுளைச்சிய ரளவர ளத்தியர்
காக்கை சுறவம் பாக்கம் பட்டின
முவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல்
கண்டகக் கைதை முண்டக மடம்பு
கண்டல் புன்னை வண்டிமிர் ஞாழல்
புலவுமீ னுப்பு விலைகளிற் பெற்றன
நளிமீன் கோட்பறை நாவாய்ப் பம்பை
விளரியாழ் செவ்வழி மீனுப்புப் படுத்த
லுணக்கல் விற்றல் குணக்கட லாடலே.
 
     (இ-ள்.) நெய்தற் கருப்பொருளா மாறுணர்த்துதும். வருணன் றெய்வமே;
சேர்ப்பனும் புலம்பனும் பரத்தியு நுளைச்சியுந் தலைவனொடு தலைவியே; பரதரும்
பரத்தியரு நுளையரு நுளைச்சியரு மளவரு மளத்தியருங் குடியே; கடற்காக்கைப்
பறவையே; சுறா விலங்கே; பாக்கமும் பட்டினமு மூரே; உவர் நீர்க்கேணியுங் கடலு
நீரே; தாழையு முட்செடியு மடம்பு முள்ளிச் செடியும் புன்னையுங் கோங்கு மலரேமரமே;
புலவு மீனுமுப்பும் விற்றுக்கொண்டனவு முணாவே; மீனுங் கோட்பறையும் பம்பையும்
பறையே; விளரியாழ் யாழே; செவ்வழி யிசைப்பாட்டே; மீனுப்புப் படுத்தலு மீனை
யுணக்கலு முணங்கியவற்றை விற்றலுங் கடனீர் குளித்தலுந் தொழிலே;என
விப்பதினால்வகையு நெய்தற் கருப்பொருளா மெனக்கொள்க. ஆகையி லிவையு
மித்தொடக்கத் தனபலவு மொவ்வொரு நிலத்திற் குரியவாகி யொன்றன் பொருண்
மற்றொன்றற் குரையாது முறையைக் காப்பதிட வுரிமை யெனப்படும். எ-று. (7)