திருமுகம், எ-ம். காராட்டை - வெள்ளாடு, எ-ம். சுடுகாட்டை - நன்காடு, எ-ம். கூறுவர். ஒரோ கூட்டத்தார்கண் வழங்குவன குழூஉக்குறி மொழி யெனப்படும். (உ-ம்.) பொற்கொல்லர், பொன்னை - பறி, எ-ம். யானைப்பாகர், ஆடையை - காரை, எ-ம். வேடர், கள்ளை - சொல்விளம்பி, எ-ம். இழிசனர், சோற்றை - சொன்றி, எ-ம். கூறுவர். பிறவுமன்ன. இம்மூவகையுந் தகுதிவழக்கெனக் கொள்க. எ-று. (4) | 195. | குறிப்பு மொழிவகைக் கூறிற் பொதுச்சொல் விகாரந் தகுதி வினைக்குறிப் பாகுபெய ரன்மொழி முதற்றொகைப் பொருட்டொகைக் குறிப்பென வொன்பதும் பிறிவுமிவ் வொழிந்தன வெளிப்படை. | | (இ-ள்.) குறிப்புச் சொல்லுரிமையா மாறுணர்த்துதும். ஒன்றனைக்குறியாப் பொதுமொழியும், விகாரமொழி யொன்பதும், தகுதிவழக்கு மொழிமூன்றும், வினைக்குறிப்பும், ஆகுபெயரும், அன்மொழித்தொகையும், முதற்றொகையும், பொருட்டொகையும், சொல்பவன் குறிப்பு, மெனக் குறிப்புமொழிக ளொன்பதாம். இவையொழித் தொழிந்த மொழியெலாம் வெளிப்படை மொழி யெனக்கொள்க. ஆயினுங் குறிப்புமொழிகள் கற்றோரு மரிதுணர் மொழிக ளாகையிற் செப்பினு ளொழியப் பெய்த வணிகலன்போல வாகாமையும், அவற்றைத் தெருவின் மிதிபட வெறிந்தார்போல வாகாமையும், அழகுற வணிந்த நகையெனத் தோன்றற்பொருட்டுக் கூட்டிய அடைமொழியானும், வினைமுதலியவற்றானுந் தானேகுறித்த பொருளை அறிவுடையோர்க்குக் காட்டுவது உணர்ந்தோர் சிறப்பெனக் கொள்க. ஆகையாற் சொன்ன வொன்பதுவகைக் குறிப்புமொழிவருமாறு. (உ-ம்.) பெற்றமென்பது காளையும் பசுவு மாகையி லாணும் பெண்ணு மொழிந்த பொதுச்சொல்லாம். இன் றிவ்வூர்ப் பெற்றமெல்லா முழவொழிந்தவெனி லுழவெனுஞ் சொல்லா லிங்ஙனம் பெற்றங் காளையாயின. இன்றிவ்வூர்ப் பெற்ற மெல்லா மறத்திற்குக் கறக்குமென்னிற் கறக்கு மென்னும்வினையாற் பசுக்களாயின. பிறவுமன்ன. விகாரச்சொல் லொன்பதுங் குறிப்புச்சொல்லாகும். மதுமரைக் குலிகமேனி யென்பதும், நீனிறப் பெருங்கடலென்பதும், மதுவெனு மடைமொழியாற் றாமரை யெனவும் நிறமெனும் பெயரா னீலமெனவும், அறிய வந்தன. பிறவுமன்ன. மேலேசொன்ன மூவகைத் தகுதிவழக்கு மொழிகளைக்காண்க. இறைவ கொடியை, தாயே யினியை, தீயே வெய்யை, நீரேதண்ணியை, முதலிய விளி வேற்றுமையான் முன்னிலை வினைக்குறிப்பென வறியவந்தன. பிறவுமன்ன. புளியைத் தின்றானென இவ்வாகுபெயரே தின்றா னென்னும் வினையா லதன் பழ மறிய வந்தன. பிறவுமன்ன. அலர் கூந்தற்கில்லையருள், பொற்றொடி சொல்லெல்லாம்பொய், என விவ் வன்மொழித்தொகை யிரண்டும் அருள் சொல்லெனப் பெயராற் குறித்த வலர்கூந்த லுடையாளும் பொற்றொடி யுடையாளுமறிய வந்தவாறு காண்க. |
|
|