தேன்கடிது, தேன்சுவை, இயல்பாயின. தேன் + குடம் = தேக்குடம், தேன் + கடிது = தேக்கடிது, என இருவழியும் ஈறுகெட்டு வலிமிக்கன. தேன் + முரி = தேமுரி, தேன் + மாண்டது = தேமாண்டது, என இருவழியும் ஈறுகெட்டன. அன்றியும், மின் பின் என்னும் இருமொழி ஈற்றில் வல்லினம்வரின் உகரம் பெற்று வல்லொற்றிரட்டும் வேற்றுமை யிடத்தும் அல்வழியிடத்தும். (உ-ம்.) மின் + கடிது = மின்னுக்கடிது, பின் + கடிது = பின்னுக்கடிது, எ-ம். மின் + கடுமை = மின்னுக்கடுமை, பின் + கடுமை = பின்னுக்கடுமை, எ-ம். வரும். இவற்றுள் சிறிது - பெரிது - தீது, எ-ம். சிறுமை - பெருமை - தீமை, எ-ம். முறையே கூட்டிக்காண்க. அன்றியும், தன் என் என்னும் இருமொழி ஈற்றில் வல்லினம்வரின் இயல்புந் திரிபுமாம். நின் என்னும் மொழியீற்றில் வல்லினம்வரின் எப்போதுமியல்பாம். (உ-ம்.) தன்பகை - என்பகை என இயல்பாயின. தன் + பகை = தற்பகை, என் + பகை = எற்பகை, என ஈறுதிரிந்தன. நின்பகை, என இயல்பாயின. நிற்பகை, என வாரா. அன்றியும், ஊன், குயின், என்னும் இருமொழி ஈற்றில் வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம்வரின் திரியாதியல்பாம். (உ-ம்.) ஊன்கடுமை, ஊன்றீமை, எ-ம். குயின்குழாம், குயின்றிரள், எ-ம். வரும். (குயின் = மேகம்.) அன்றியும், எகின் எ-து. புளியமரமுதற் பன்மரமும், அன்னம், கவரிமா, புள்ளிமான், நீர், நாய், என்றிவையாகும். இவற்றுண் மரமல்லாதன எகின் என்னுமொழி இருவழியு மூவினம் வரின் இயல்பாகவும், வல்லினம்வரின் அகரச்சாரியை பெற்று வல்லொற்று மெல்லொற்று மிகவும்பெறும். (உ-ம்.) எகின் + கால் = எகின்கால், எ-ம். எகின் + பெரிது = எகின்பெரிது, எ-ம். இருவழியிலும் இயல்பாயின. எகின் + கால் = எகினக்கால், எகின் + பெரிது = எகினம்பெரிது, எ-ம். எகின் + பேடை = எகினப்பேடை, எ-ம். இருவழியிலும் வலிமெலி மிக்கன. எகின் + அழகு = எகினவழகு, எ-ம். எகின் + வலிது = எகினவலிது, எ-ம். மற்றை எழுத்துப்புணர்வழி அகரம்பெற்றவாறு காண்க. பிறவுமன்ன. எ-று. (5) |