267. | வருக்க மாலையாம் வருக்க வெழுத்தென வுயிரோடு க ச த ந ப ம வ வெனவெண் வரிமுதல் வந்து வருமெண் ணகவலே. | |
(இ-ள்.) வருக்கமாலை யாமாறுணர்த்துதும். வருக்க வெழுத்தெனக் கூறிய வெண்பரி யெழுத்து முதற்கண்வந் தெட்டகவலை யெப்பொருண் மேலும் பாடிய செய்யுள் வருக்க மாலையெனப்படும். ஆகையி லிங்கண் வருக்க வெழுத்தெனப் படுவன மொழி முதற்கண் வருமெழுத் தாமாயினு மவற்றுள் ஞவ்வரி யவ்வரி மிக வழங்காமையா னிங்க ணொழிந்தன. எ-று. (17) |
268. | மாலையே யகவலால் வழங்கு மவற்றுட் டானைபோர் வெற்றி தனித்தனி புகழ்வது தானை வஞ்சி வாகையென மூன்றாம். | |
(இ-ள்.) மூவகைமாலை யாமாறுணர்த்துதும். பலநேரிசை யாசிரியப்பா வொடு நால்வகை வீரத்தானையைப் புகழ்வது தானைமாலை யெனவும், பகைவரைத் தாக்கச்செல்லும் வீரத்தைப் புகழ்வதே வஞ்சிமாலையெனவும், பகைவரைச் செகுத்துக்கொண்ட வெற்றியைப் புகழ்வது வாகைமாலை யெனவும், வழங்கும். ஆகையிற் சூத்திரத்துண் மாலையென்பது முதனிலைத் தீவகமாக நின்ற தெனக் கண்டுணர்க. எ-று. (18) |
269. | புகழ்ச்சி மாலையாம் பூங்குழ லாரை யிகழ்ச்சியில் குலமியை வஞ்சி பாட னாம மாலையா நம்பிகட் புகழ்தலே. | |
(இ-ள்.) புகழ்ச்சிமாலை நாமமாலையாமாறுணர்த்துதும். தன்னுரிச்சீருந் தளையு மன்றிப் பிறவற்றையுங் கூட்டிய வடிகள் கலந்து வரும் வஞ்சிப்பா வாற்குலப்பெயர் விளங்கித் தோன்ற மாதரைப் புகழ்வது புகழ்ச்சிமாலையெனவு மங்கண் மாந்தரைப் புகழ்வது நாமமாலை யெனவும் வழங்கும். எ-று. (19) |
270. | செருக்கள வஞ்சியாஞ் செருமுகத் தாயவை சுருக்கிய வஞ்சி தொடுத்துப் பாடலே. | |
(இ-ள்.) செருக்களவஞ்சி யாமாறுணர்த்துதும். தேர் - கரி - பரி - பதாதி - யென விருபடை நாற்றானை யெதிர்த்துக் கணைக டொடுத்தலு மடுத்துவளைவே லெறிதலுங் கலந்து கைவாள் வீசலும் வலமிடம் வளைத்ததேரும் வெருவுறச் சினத்த களிறுந் தூசெழப்பாய்ந்த பரியு மொலிமிகப் பொருதபதாதியு மிவையுமிவற்றோடுபோர்க்களத் தாயின யாவுந் தோன்றப் பற்பல வஞ்சிப் பாவொடு தொடுத்த செய்யுளே செருக்களவஞ்சி யெனப்படும். எ-று. (20) |