(இ-ள்.) மேலேவகுத்துக்கூறிய நால்வகைச்சொற்களுளிவ்வோத்தின் கண்ணே யுரிச்சொல்லியல்பினை விளக்குதும். உரியெனப்படுவன பலவகைக்குணங்களை யறிவிக்கும் பெயர்ச்சொற்களாம். இவ்வுரிச்சொல் குறிப்பும், பண்பும், இசையும், என மூவகைப்படும். குறிப்பாவன - மனத்தாற்கு றித்தறியப்படுவன, பண்பாவன - விழியாலறியப்படுவன, இசையாவன - செவியா லறியப்படுவன; இவற்றும்:- குறிப்புச்சொற்கள் வருமாறு:- சால், உறு, தவ, நனி, கூர், கழி, என்னுமாறு மிகுதி யென்னுங் குறிப்பை யுணர்த்து வனவாம். (உ-ம்.) தென் மலை யிருந்த சீர்சான் முனிவரன் - சால், உறுவளிதுரக்கும் - உறு, தவப் பல - தவ, நனிப்பயன்களை - நனி, துனிகூரெவ்வமொடு-கூர், கழிநலம் - கழி, எனவரும். பையுள், சிறுமை, இரண்டும் நோயையும்; இலம்பாடு, ஒற்கம், இரண்டும் வறுமையையும்; விறப்பு, உறப்பு, வெறுப்பு, மூன்றுஞ் செறிவினையையும்; கறுப்பு, சிவப்பு, இரண்டும் வெகுளியையும்; உணர்த்துவனாம். படர், எ-து. நினைத்தல் - செல்லுதல் - நோவு - மூன்றையும்; செழுமை, எ-து. வளம்-கொழுப்பு - இரண்டையும்; தா, எ-து. வலி - வருத்தம் - இரண்டையும்; உணர்த்து வனவாம். - நன்னூல். - 'சாலவுறுதவ நனிகூர் கழிமிகல்.' - தொல்காப்பியம் - "பையுளுஞ்சிறுமையு நோயின்பொருள. - இலம்பாடொற்கமாயிரண்டும் வறுமை. - விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே. - கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள. - படரே யுள்ளல் செலவுமாகும். |