வெய்ய குரல் - முழக்கம் . சினவேறு - நெருப்பு.
வி-ரை , இ-ள்: கொடிய இடி முழக்கத்தைத் தோற்றுவித்து அதற்குக் காரணமான கொடிய இடியைத் தன்னிடத்தே யுடைத்தாயினும் மழை பொழியும் மேகத்தை அனைவரும் பாராட்டுவார்கள் ; உலகில் இருள் தன்மை வாய்ந்த மிகக் கொடிய குற்றங்களைச் செய்யினும் , அவர்கள் யாவர்க்கும் வரையாது வழங்கும் வள்ளன்மையாராயின் அவர்களையே பாராட்டுவர் என்பதாம்.
இதன்கண் ' கடிய குரலையும் , கொடுமையையும் உடைய இடியைத் தன்னகத்தே கொண்டிருப்பினும் மழை தருதலின் மேகத்தை யாவரும் புகழ்வர் ' என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும் . இதனை முடித்தற்குக் 'குற்றமிருப்பினும் கொடையாளரை யாவரும் புகழ்வர் ' என்ற உலகறி பொருளை ஏற்றியிருத்தலின் வேற்றுப்பொருள்வைப்பாயிற்று . குற்றம்உடையார் புகழப்படாதிருத்தலே இயல்பு . அங்ஙனமின்றிப் புகழப்படுவர் என்றல் முரணித் தோன்றலாம் .
(4) சிலேடையின் முடித்தல் என்பது முன்னர் வைத்த பொருளையும், பின்னர் வைத்த பொருளையும் ஒரு சொற்றொடர்பால் சொல்லுவது.
எ-டு : ' எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த
முற்றிழையாள் வாட முறுவலிக்கும் - முற்று
முடியாப் பரவை முழங்குலகத் தென்றும்
கொடியார்க்கும் உண்டோ குணம் ! '
இ- ள் : முல்லைக் கொடியானது , முன்பு தன்னை வளர்த்துக் காத்த குறைவற்ற அணிகளை யுடையளாகிய இவள் வருந்த முறுவல் செய்யா நின்றது ; இஃது என்னே ! முழக்கத்தினை யுடைய முடிவு தெரியாத கடல் சூழப்பட்ட உலகத்துக் கொடியார்க்கும் குணம் உண்டாமோ ? எ-று.
கொடியார் - கொடுமையுடையார்க்கும் , கொடிக்கும் பெயர் . இதனுள் , கொடுமையுடையார்க்கும் , கொடிக்கும் சிலேடை வந்தவாறு காண்க.
வி-ரை:இதன்கண் ' தன்னை வளர்த்தெடுத்த தலைவி தலைவனுடைய பிரிவால் வருந்துமாறு முல்லைக்கொடி முறுவலிக்கும் (அரும்பும்) ' என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும் . இதனை முடித்தற்கு ' உலகத்தில் கொடியாரிடத்தும் குணம் உண்டாகுமோ ? ' என்ற உலகறி பொருளை ஏற்றி வைத்திருத்தலின் வேற்றுப்பொருள் வைப்பாயிற்று . இதன்கண் முன்னர்க் கூறிய பொருள் முல்லைக்கொடி . அதனை விளக்கப் பின்னர் வைத்த பொருள் கொடியவர்கள் . இரண்டிற்கும் ஏற்பக் 'கொடியார்க்கும் உண்டோ குணம் ' என்ற தொடர் இருத்தலின் சிலேடை ஆயிற்று.
கொடியார் - முல்லைக்கொடியார் ; கொயவர்கள் . அஃறிணைப் பொருளாகிய முல்லைக் கொடியைக் கொடியார் என்றல் இழிவுபற்றி வந்த திணைவழுமைதியாம்.
(5) கூடாவியற்கை என்பது கூடாததனைக் கூடுவதாக்கிக் கொள்வது.