தோற்றத்திலே யுடைத்தாய், மதுச்சோர்ந்து விட்டுபோதற்கு அரிய நிழலுடைத்தாய் , ஓங்கிநிற்பது என்று சோலை மேலும் செலுத்துக எ - று. இது ஓர் வள்ளலைக் கொள்ள நின்றது . நின்றெமக்கே ஓங்கிய சோலை - நிலைபேறு உடைத்தாய் எமக்கு ஓங்கிய சோலை. வள்ளல்மேற் செல்லுங்கால் : உள் - மனம் , நிலவல் - உண்டாதல் ' நீர்மை - குணம் , பயம் - உபகாரம் , சுரத்தல் - அளித்தல் , கண்ணெகிழ்தல் - கண்ணோட்டம் , நிழல் - மென்மை எனவும் ; சோலைமேற் செல்லுங்கால் : உள் - சோலைநடு . நீர்மை - புனல் , பயம் - பழம் , சுரத்தல் - கொடுத்தல் , தண்ணளி - வண்டு , தாங்கல் - உடைத்தாதல் , மலர் - பூ , முகம் - தோற்றம் , கள் - மது , நெகிழ்தல் - சோர்தல் எனவும் வரும். வி-ரை: அடை பொதுவாக்கிப் பொருள் வேறுபட மொழிதல் : - கவிஞன் தான் சொல்லக் கருதிய பொருளுக்கும் , அதனை மறைத்து அதற்கு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருளுக்கும் அடைமொழிகளைப் பொதுவாகக் கூறி , தாம் கருதியதற்கு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருளை வேறாக மொழிதல் இதன் இலக்கணமாகும். இப்பாடற்கண் கவிஞன் சொல்லக் கருதிய பொருள் ஒரு வள்ளலாகும் . அதனைப் புலப்படுத்த அதற்கு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருள் ஒரு சோலையாகும் . முதல் மூன்றடிகளில் இவ்விரண்டற்கும் பொருந்துமாறு அடை மொழிகளைக் கூறித் , தான் கருதிய பொருளாகிய வள்ளற்கு வேறாகச் சோலையைக் கூறியிருத்தலின் , இது அடைபொதுவாக்கிப் பொருள் வேறுபட மொழிதல் ஆயிற்று. 3. அடைவிரவிப் பொருள் வேறுபட மொழிதல் எ - டு : ' தண்ணளிசேர்ந் தின்சொல் மருவுந் தகைமைத்தாய் எண்ணிய எப்பொருளும் எந்நாளும் - மண்ணுலகில் வந்து நமக்களித்து வாழும் முகிலொன்று தந்ததால் முன்னைத் தவம் ' இ-ள்: குளிர்ந்த கருணையையும் இன்சொல்லையும் உடைத்தாய் , எல்லாரும் ஆசைப்பட்ட எல்லாப் பொருளையும் காலம் வரையாது மண்ணுலகிலே பிறந்து எம் போல்வார்க்கு அளித்து வாழும் என்று ஒரு வள்ளல் மேலும் ; உலகத்தார்க்குக் குளிர்ச்சியோடு கூடக் கொடுக்கின்ற கொடைசேர்ந்து நன்றாய புகழ் மருவி , எண்ணப்பட்ட எல்லாப் பொருளையும் எக்காலமும் உலகிற்குச் சேர்ந்து கொடுத்து வாழும் என மேகத்தின் மேலும் செலுத்துக எ - று. 1இதுவும் உட்கொண்ட பொருள் மேலதனோடு ஒக்கும். 1. ஈண்டு ' எண்ணிய எப்பொருளும் எந்நாளும் மண்ணுலகில் வந்து கொடுக்கும் ' என்றது , உலகில் தோன்றும் பொருள்களுக்கு முதற்காரணம் நீராதலால் அக்காரணத்தை மேகங்கொடுப்ப அதன் காரியமாகிய பொருள் எல்லாம் புலப்படும் என்றவாறு - என்ற வாக்கியம் சில பிரதிகளில் காணப்படுகிறது.
|