பொருளணியியல்141

கற்பகத் தருவில் முத்தரும்புதல், செம்பொன் முறிததைதல் , பைந்துகிரின் தொத்தலர்தல் , பல்கலனும் சூழ்ந்தொளிர்தல், ஆகியன இருப்பதாகக் கூறலின், இது இதுவரை காணாத புதுமைபற்றிப் பிறந்த வியப்பாயிற்று.

5. காமம்

எ - டு ; ' திங்கள் நுதல்வியர்க்கும் வாய்துடிக்கும் கண்சிவக்கும்
அங்கைத் தளிர்நடுங்கும் சொல்லசையும் - கொங்கை
பொருகாலும் ஊடிப் புடைபெயருங் காலும்
இருகாலும் ஒக்கும் இவர்க்கு '

திங்கள் - பிறை , அங்கை - அழகிய கை.

வி-ரை:, இ-ள்: கொங்கைகள் என் மீது அழுந்துமாறு என்னைத் தழுவிய பொழுதும் , என்பால் ஊடல் கொண்டு என்னிடத்தினின்றும் நீக்கியபொழுதும் இவர்க்கு , எட்டாம் பிறையை யொத்த நெற்றி வியர்க்கும், வாய் துடிக்கும், கண்சிவக்கும், அழகிய கைகளாகிய தளிர்கள் நடுங்கும் சொல் தடுமாறும் என்பதாம்.

காமச் சுவையைத் தொல்காப்பியர் உவகை என்ற பெயரால் குறிப்பர். இது செல்வம், அறிவு, புணர்ச்சி , விளையாட்டு ஆகிய நான்கும் பற்றிப் பிறக்கும் என்பர்.

இப்பாடல் ஒரு தலைமகன், தன் தலைவியின்மாட்டுள்ள காதற் களிப்புப் புலப்படக் கூறியதாகும். 'ஊடல், உணர்தல், புணர்தல் இவை காமம் கூடியார்ப் பெற்ற பயன் ' ஆதலின் இவ்விரு நிகழ்ச்சியும் காமம் பற்றிய தாயிற்று.

6 . அவலம்

எ - டு ; 'கழல்சேர்ந்த தாள்விடலை காதலிமெய் தீண்டும்
அழல்சேர்ந்து தன்னெஞ் சயர்ந்தான் - குழல்சேர்ந்த
தாமந் தரியா(து) அசையுந் தளிர்மேனி
ஈமந் தரிக்குமோ வென்று '

1 இ-ள்: வீரக்கழலைக் கோத்த காலினையுடைய விடலையானவன், தன்னுடைய மனைவியின் மெய்யை எரிக்கும் அழலைச் சேர்ந்து, தன்னுடைய நெஞ்சம் வருந்தினான், ' குழலிடத்துப் பொருந்தின மாலையைப் பொறாது தளருந் தளிர் போலும் மேனியானது ஈமத்து எரியைப் பொறுக்கவற்றோ ? ' என்று எ - று .

வி-ரை:; இதனைத் தொல்காப்பியர் அழுகை எனக் குறிப்பிடுவர். இது இளிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய நான்கும் பற்றிப் பிறக்கும் என்பர். இப்பாடல் தலைவியை இழந்த தலைவனின் அவலத்தைப் பெரிதும் விளக்குதலின், இது இழவுபற்றிய அவலமாயிற்று.

7. உருத்திரம்

எ - டு ; ' கைபிசையா வாய்மடியா கண்சிவவா வெய்துயிரா
மெய்குலையா வேரா வெகுண்டெழுந்தான் - வெய்யபோர்த்
தார்வேய்ந்த தோளான் மகளைத் தருகென்று
போர்வேந்தன் தூதிசைத்த போது '


1. இவ்வுரை சில பிரதிகளில் இல்லை.