பொதுவணியியல்15

வைதருப்ப நெறி

14. செறிவே தெளிவே சமநிலை யின்பம்
ஓழுகிசை யுதாரம் உய்த்தலில் பொருண்மை
காந்தம் வலியே சமாதி யென்றாங்(கு)
ஆய்ந்த ஈரைங் குணனும் உயிரா
வாய்ந்த வென்ப வைதருப் பம்மே.

எ-ன்: வைத்த முறையானே வைதருப்ப நெறியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: செறிவு முதல் சமாதி யீறாகக் கூறப்பட்ட பத்துக் குணனும் உயிராகப் புலப்படுவது வைதருப்பநெறி எ-று.

'வாய்த்த ' என்பது ' வாய்ந்த என மெலிந்து நின்றது . 'உயிரா ' என்பதனை உயிர்போல இன்றியமையாத எனவுங் கொள்க.

கௌட நெறி

15. கௌட மென்பது கருதிய பத்தொடும்
கூடா(து) இயலுங் கொள்கைத் தென்ப.

எ-ன்: கௌட நெறியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: கௌட நெறியென்று சொல்லப்படுவது மேற்குறித் துரைக்கப்பட்ட பத்துக் குணவலங்காரங்களோடுங் கூடாது நடக்கும் ஒழுகலாறுடையது எ-று.

'பத்தொடும் கூடாது' என்னும் முற்றும்மையை எச்சவும்மையாக்கிச் சிலவற்றோடு கூடியும் வரும் எனக் கொள்க.

வி-ரை:'முற்றுமை ஒரோவழி எச்சமும் ஆகும் ' (நன்-426) என்பதால் ' பத்தொடும் கூடாது ' என்பதிலுள்ள முற்றும்மை எச்சப் பொருள்பட்டு , கௌட நெறியார் இப்பத்து நெறிகளில் சிலவற்றை ஏற்கவும் செய்வர் என்பது பெறப்படும்.

இப்பத்து நெறிகளுள் கௌட நெறியாரும் ஏற்கும் நெறிகள் ஐந்தாம் அவையாவன:- பொருள் காரணமான இன்பம், ஒழுகிசை , உதாரம் , உய்த்தலிற் பொருண்மை , சமாதி என்பன.


1. செறிவு

16. செறிவெனப் படுவது நெகிழிசை யின்மை.

எ-ன்: செறிவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: செறிவென்று சொல்லப்படுவது நெகிழ்ந்த இசையின்றி வரத் தொடுப்பது எ-று.

எ-டு : 'சிலைவிலங்கு நீள்புருவஞ் சென்றொசிய நோக்கி
முலைவிலங்கிற் றென்று முனிவாள்-மலைவிலங்கு
தார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோ
கார்மாலை கண்கூடும் போது '

இ-ள்: புணர்ச்சிக்கண்ணே நின்னுடைய மார்பஞ் செறிய முயங்குங்கால் முலை சிறிது விலங்கா நிற்ப , அதனை நோக்கிப் பொறாளாய் விற்போல வளைந்து நீண்ட புருவமானது நெற்றிமிசை யேறி வளைய ஊடுந்தன்மையை யுடையாள் ; மாறுபாடிலங்கிய பலவகைப்பட்ட