மானிடர் - உழவர் . மிகுத்தல் - திரட்டல் . உள்வாழ்தல் - உள்ளே உண்டாதல் .தேம் - தேன் . சிந்தல் - பொழிதல் . தகைமை - பெருமை. திருவுள்ளம் நந்தல் - அழகிய மனம் சிறத்தல் . பகைத்தார் நாட்டின் மேற் செல்லுங்கால் : - தள்ளா - அசையா . விடத்தேர் - ஒரு மரம். தடம் - மலை . தாமரை - தாவுமரை. அடைதல் - சேர்தல். எள்ளாத - இகழாத. அரிமான் - சிங்கப்போத்து. இடர் மிகுத்தல் - துன்பம் உண்டாக்குதல். உள் - மனம். வாழ்தல் - மேவல். தேம் - நாடு. சிந்துகை - அழிவுபடுகை. தகைமை - தன்மை. நந்துந்தொழில் - வேறு படுந்தொழில்.
வி-ரை: இப்பாடலிலுள்ள தொடர்கள் சோழனின் நட்பு நாடு, பகை நாடு ஆகிய இரண்டற்கும் பொருந்துவதால் சிலேடை யாயிற்று. இத்தொடர்கள் சோழனின் நட்பு நாட்டிற்கு ஆங்கால் ஒருவிதமாகவும், பகை நாட்டிற்கு ஆங்கால் வேறொரு விதமாகவும் பிரிந்து பொருள் படுவதால், இது பிரிமொழிச் சிலேடை யாயிற்று.
(50)
சிலேடை விரி
77. ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோதம் அவிரோதம்
எனும்எழு வகையினும் இயலும் என்க.
எ-ன் , இதுவும் அச்சிலேடை அலங்காரத்தை விரித்து உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) ; அச்சிலேடை, ஒருவினைச் சி லே டை யு ம் , பலவினைச் சிலேடையும், முரண்வினைச் சிலேடையும், நியமச் சிலேடையும், நியம் விலக்குச் சிலேடையும், விரோதச் சிலேடையும், அவிரோதச் சிலேடையும் என்னும் ஏழு கூறுபாட்டான் நடக்குமென்று சொல்லுவர் நூலோர் எ - று .
அவற்றுள் ,
(க) ஒருவினைச்சிலேடை என்பது ஒரு வினையான் வருவது.
எ-டு ; ' அம்பொற் பணைமுகத்துத் திண்கோட் டணிநாகம்
வம்புற்ற வோடை மலர்ந்திலங்க - உம்பர்
நவம்புரியும் வானதியும் நாண்மதியும் நண்ணத்
தவம் புரிவார்க்(கு) இன்பம் தரும் '
(இ-ள்) அழகிய பொலிவுடைய பருத்த முகத்தின் கண்ணே திண்ணிய கோட்டை யுடைத்தாய் அழகு பெற்றிருந்த யானையானது கச்சோடு கட்டிய பட்டம் விரிந்து விளங்க, முடிமீது ஒளிமிக்குப் பெரிதாகிய கங்கையும் இளம்பிறையும் பொருந்த வந்து, தவம் செய்வோர்க்கு வேண்டிய இந்திர பதங்கள் முதலாகிய இன்பங் கொடுக்கும் எனவும் ; அழகிய பொன்னோடு கூடிய மூங்கில் மிடைந்த பக்கமுடைத்தாய்த் திண்ணிய சிகரங்களையும் உடைத்தாய், அழகு பெற்ற மலை வாசனை கமழும் ஓடை பூத்து விளங்கத் தன்மீது ஒளி மிக்குப் பெரிதாகிய கங்கையும் பிறையும் மருவும்படி உயர்ந்து தவம் செய்வோர்க்கு அவர் வேண்டிய பொருள்கள் எல்லாம் கொடுக்கும் எனவும் வந்தவாறு காண்க.