இப்பாடற்கண் வெண்ணீர்மை, வெறியவாய், கண்ணீர்மை, இரங்குவன என்ற சொற்கள் பல பொருள்களிக்கியையுமாறு புணர்க்கப்பட்டு, அப்பொருள்களுள் சிலேடித்த பொருள்களாகவுள்ள முத்து, பொழில், யாழ் என்பனவற்றிற்கே தேற்றேகாரம் கொடுத்து வரையறுக்கப்பட்டுள்ளமையின்
இது நியமச் சிலேடையாயிற்று.
(5) நியமவிலக்குச்சிலேடை என்பது சிலேடித்த பொருளை நியமஞ்செய்து அந்நியமத்தை விலக்குவது.
எ-டு: 'சிறைபடுவ புட்குலமே தீம்புனலும் அன்ன
இறைவநீ காத்தளிக்கும் எல்லை - முறையில்
கொடியன குன்றத்தின் மாளிகையே யன்றிக்
கடியவிழ்பூங் காவு முள'.
இ-ள்: தலைவனே! நீ காத்தளிக்கும் நிலவரைப்பிற் சிறை உடைத்தாய் இருப்பன புட்சாதியே; `தீம்புனலும் அன்ன' என்றதனால் தித்தித்த புனல்களும் சிறையுடைய; கொடியை உடையன குன்றம் போன்ற மாளிகைகளே; அன்றிக் `கடியவிழ் பூங்காவு முள' என்றதனால் நாற்றம் பரந்த பூவைஉடைத்தாகிய சோலைகளும் கொடியை யுடையன எ-று.
இதனால் சிறைபடுதலும் கொடுமையும் இவன் காக்கின்ற நிலத்தின் கண்இல்லை எனக் கிடந்தவாறு கண்டு கொள்க. சிறை-சிறகும், கரையும், சிறைச்சாலையும். கொடி-பதாகையும், வல்லியும், கொடுமையும்.
வி-ரை: இப்பாடற்கண் ஈரிடத்து நியம விலக்குச் சிலேடையுள்ளன (1)சிறைபடுவ என்ற தொடரைச் சிலேடைப் பொருள்படுமாறு அமைத்துப் புட்குலமே என முன்னர் நியமித்தவாறும் பின் அதனைத், 'தீம்புனலும் அன்ன' என்ற தொடரால் விலக்கியவாறும் காண்க.(2)`கொடியன' என்ற சொல்லைச் சிலேடைப் பொருள்படுமாறு அமைத்துக் குன்றத்தின் மாளிகையே என முன்னர் நியமித்தவாறும், பின் அதனைக் `கடியவிழ் பூங்காவுமுள' என்ற தொடரால் விலக்கியவாறும் காண்க.
(6) விரோதச்சிலேடை என்பது முன்னர்ச் சிலேடித்தவற்றைப் பின்னர் விரோதிப்பச் சிலேடிப்பது.
எ-டு: 'விச்சா தரனேனு மந்தரத்து மேவானால்
அச்சுத னேனுமம் மாயனலன்- நிச்ச
நிறைவான் கலையா னகளங்க னீதி
இறையா னநகனெங் கோ'
இ-ள்: விஞ்சையர் ஆகாயத்தில் மேவுவார்; சோழன் கேட்டின் கட் செல்லான்; திருமால் மாயம் உடையான் ஆதலால் மாயன் எனப்படான் நாடோறும் நிறைந்த வெண்மை எய்துங் கலைகளை உடையனாகிய சந்திரன் களங்கம் உடையவன்; நாடோறுங் கலைநூல்களால் பெருக்கம் உடையனேனும் சோழன் அகளங்கள் எனப்பட்டான்; முக்கட்கடவுள் பொருப்பு உடையன் ஆதலால் நகன் எனப்பட்டான்; சோழனாகிய எங்கோன் தீவினை இன்மையால் அநகன் எனப்பட்டான் எ-று.