166தண்டியலங்காரம்

அவற்றுள்,

1. வினைப்புணர்நிலை

எ-டு: 'வேண்டுருவங் கொண்டு கருகி வெளிபரந்து
நீண்ட முகிலுடனே நீர்பொழிந்த - ஆண்டகையோர்
மேவல் விரும்பும் பெருநசையான் மெல்லாவி
காவல் புரிந்திருந்தோர் கண் '

(இ-ள்) தான் வேண்டிய உருவத்தைக் கொண்டு கறுத்த நிறத்தையுடையதாய் ஆகாயத்திலே பரந்து பெரிதாய் இருக்கப்பட்ட மழை முகிலுடனே நீர் பொழியாநின்றன. பிறர் இச்சிக்கும் தன்மையை உடைத்தாகிய உருவத்தை யுடைத்தாய் அலங்கரித்து எழுதப்பட்ட மையோடு கூடிய வெண்மையான் நீண்டிருக்கப்பட்ட கண்கள் எ-று.

ஆண்மைத் தன்மையை யுடைய தலைவரைச் சேர்தலை விரும்பிய காதலாலே தம்முடைய மெல்லிய உயிர் போகாதபடி காக்குந் தொழில் மிக்கிருக்கின்ற மடவாருடைய கண் எனக் கூட்டுக.

வி-ரை: இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள் இரண்டு. (1) முகில். (2) கண். இவையிரண்டிற்கும் 'நீர் பொழிந்த ' என்னும் தொழில்பற்றிய ஒரு சொல்லே முடிக்கும் சொல்லாக அமைந்திருத்தலின் இது வினைப் புணர்நிலை யாயிற்று.

2. பண்புப்புணர்நிலை

எ- டு : பூங்காவிற் புள்ளொடுங்கும் புன்மாலைப் போழ்துடனே
நீங்காத வெம்மையவாய் நீண்டனவால் - தாங்காதல்
வைக்குந் துணைவர் 1வருவமதி பார்த்தாவி
உய்க்குந் தமியார் உயிர் '

(இ-ள்) காதலிக்கப்பட்ட துணைவர் வருங்காலம் பார்த்திருந்த மடவாருடைய உயிரானது, பூம்பொழிற்கண்ணே புட்களெல்லாம் ஒடுங்கப்பட்ட மாலைப் பொழுதுடனே, நீங்காத துயரஞ் செய்து, தானும் கழியாதே நின்றது எ-று.

'ஒன்றே மொழிவது ' என்று ஒழியாது' புணர மொழிவது ' என்ற மிகையால், மூன்றாம் வேற்றுமை அதனோடு இயைந்த ஒருவினை எனப் பொருள்பட வரினே இவ்வலங்காரமாவது எனக் கொள்க.

வி-ரை: இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள்கள் இரண்டு. (1) மாலைப்பொழுது. (2) தமியார் உயிர். இவை யிரண்டிற்கும் ' நீண்டன ' என்னும் பண்புபற்றிய ஒரு சொல்லே முடிவாக அமைந்திருத்தலின், இது பண்புப் புணர்நிலை யாயிற்று.

' புணர மொழிவது ' என்ற மிகையால் கூறப்பட்ட பொருள் :- நூற்பாவில் ' இரு பொருட்டு ஒன்றே புணர மொழிவது ' என்றிருப்பதால், இரு பொருள்கள் தனித்தனியே கூறப்பட்டிருக்க, அவற்றை ஒரு சொல் முடிக்கவரின் அது புணர்நிலையாம் என்றல் கூடாது. இங்ஙனம் கொள்ளின், பேருந்து வண்டிகளில் கைகளை வெளியே நீட்டல், புகை பிடித்தல் கூடாது என்பன போன்ற தொடர்கள் எல்லாம் புணர்நிலையாகக் கூற நேரும். ஆதலின் பொருள் இரண்டாக இருப்பினும் ஒன்று ஒன்றோடியைந்து மூன்றாம்


1. ' வரும்வழி ' என்பதும், ' வருமாறு ' என்பதும் பாடங்களாகும்.