'உண்டோ' என்பதற்கு இல்லை எனப் பொருள் கொள்க .
இதனுள் , 'தண்டுறை நீர் நின்ற தவம் ' என்பது தற்குறிப்பேற்றம் . 'தவத்தால்' என்பது காரகவேது . 'அளிமருவு' என்பது சிலேடை . 'புண்டரிகம் நின்வதனம் போலும்' என்பது உவமை . 'உண்டோ முயன்றால் முடியாப் பொருள்' என்பது வேற்றுப்பொருள் வைப்பு . 'உளம் பருகும் பால் மொழியாய்' என்பது சுவை . இப்பாட்டிற்கு இவ்வண்ணமே பல அலங்காரங்களும் காண்க .
இஃது , உறுப்பனைத்தும் கூட்டிய கலவை போல்வதொரு தன்மைத்தாய் , ஒன்றற்கு மிகுதி தோன்றாமல் உரைப்பதாம் எனக் கொள்க . அல்லதூஉம் , சந்தனத்தோடு கருப்பூரம் விரவினும் , மான் மதத்தோடு கருப்பூரம் விரவினும் சந்தனமும் , மான்மதமும் என்பதல்லது கலவை எனப்படா ; அவ்வாறே இரண்டு அலங்காரம் கூடின் இவ்வலங்காரம் எனப்படாது ; பல அலங்காரங்களும் இரண்டிறந்தனவே கூடின் இவ்வலங்காரமாவது . இரண்டிறந்த பல என்பதே ஈண்டு ஆசிரியர் கருத்து எனக் கொள்க .
உவமை உருவகங்கட்குப் புறனடை
89. ஒப்புமை யில்லதும் ஐயமும் உவமையில்
செப்பிய திறமும் உவம வுருவகமும்
உருவகத் தடக்கலும் உணர்ந்தனர் கொளலே .
எ-ன் , உவமை உருவகங்களைக் குறித்து ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று .
இ-ள்: ஒப்புமை யில்லது என்பது - பொதுநீங்குவமை . அது 'தானே உவமை தனக்கு' எனவரும் .
ஐயம் என்பது - ஐயவுவமை . அது 'தாதளவி வண்டு ' எனவரும் . இதனுள் தாமரை கொல் ! முகங்கொல் ! என்பது ஐயம் .
இவை யிரண்டும் , முன்னர் உவமை யனைத்திற்கும் பொதுவாக ஓதிய சூத்திரத்துள் 'பண்பு தொழில் பயன்' என்பன காரணமாய ஒன்றாகியும் பலவாகியும் வரும் பொருளோடு பொருள் இயைய வைத்து ஒப்புமை புலப்பட உரைப்பதே உவமை என்பதே கொண்டு , 'பொதுவாகிய குணம் முதலாகியன காரணமாகப் பொருளோடு பொருள் இயைய வைத்து ஒப்பித்தன இல்லை' என்று குற்றங் கூறப்படாது .
என்னை யெனின் , 'தானே உவமை தனக்கு' என்றவழியும் , ஒக்கும் பொருளை யெடுத்தே அவற்றினும் சிறந்தது இஃது என்று உரைத்த துணையே , அவற்றொடு ஒப்புமை வேண்டியதிலனாயின் முன்னர்க் கூறான் : அதனால் பொருளோடு பொருள் இயைய வைத்து அவற்றின் ஒப்புமை கருதியே உரைத்தானாம் எனக் கொள்க . ஐயவுவமையும் , 'தாமரைகொல் முகங்கொல் ' என்ற வழித் தாமரைக்கும் முகத்திற்கும் பொதுவாகியதொருதன்மை கருதியே உரைத்தது . அவ்வாறன்றேல் , தாமரையோடு முகத்திடை ஐயந்தோன்ற உரையான் என்பது .