பொருளணியியல்33

அதன் வகை

29. அதுவே,
பொருள் குணஞ் சாதி தொழிலொடு புலனாம் .

எ-ன் தன்மையது பகுதியாமாறு உணர்த்துதல் நுதலிற்று .

(இ-ள்) அத்தன்மை பொருளும் , குணமும் , சாதியும் , தொழிலும் என்னும் இவைபற்றித் தோன்றும். எ-று.

அவற்றுள் ,

1. பொருட்டன்மை

'நீல மணிமிடற்ற னீண்ட சடைமுடியன்
நூலணிந்த மார்பன் நுதல்விழியன் - தோலுடையன்
கைம்மான் மறியன் கனன்மழுவன் கச்சாலை
எம்மான் இமையோர்க் கிறை '

(இ-ள்) கருங்குவளை போன்ற அழகிய மிடற்றினையும் , முடியின் கண்ணே நீண்டிருக்கப்பட்ட சடையினையும் , மார்பினிடத்தே யணியப்பட்ட முப்புரி நூலினையும் , நெற்றியின்கட் சேர்ந்த விழியினையும் , உடையாக அசைத்த தோலினையும் , கரதலத் தேந்திய மானினையும் , கனல் போன்ற மழுவினையும் , திருக்கச்சாலை யென்னும் திருப்பதியினையும் உடையவனாய் எம்மை யாண்டுகொண்ட பெரியோன் இமையவர்க்குத் தலைவன் எ-று .

அன் - சாரியை . நீலமணி போன்ற மிடற்றினையுடையன் எனவும் , நீலத்தையுடைய அழகிய மிடற்றினன் எனவும் அமையும் . மிடற்றன் , சடையன் , மார்பன், விழியன் எனச் செவ்வெண்ணாக்கினும் அமையும் . மணி - அழகு . 'கன மழுவன்' எனப் பாடமோதிப் 'பெரிய மழுவினன்' என்பாருமுளர் . கனலையும் மழுவையும் உடையன் என்றாக்கினும் அமையும் . நீலம் - கருங்குவளை ; அஃது ஆகுபெயரால் பூவெனக் கொள்க . 'கச்சாலை எம்மான்' என்றது , கச்சாலையிலே உறையும் பெரியோன் எனினும் அமையும் .

வி-ரை: சிவபெருமானாகிய பரம்பொருளிடத்துள்ள பலவிதமான தன்மைகள் இப்பாடலில் கூறப்படுவதால் , இது பொருள் தன்மையாயிற்று .

2. குணத் தன்மை

'உள்ளங் குளிர வுரோமஞ் சிலிர்த்துரையும்
தள்ளவிழி நீரரும்பத் தன்மறந்தாள் - புள்ளலைக்கும்
தேந்தா மரைவயல்சூழ் தில்லைத் திருநடஞ்செய்
பூந்தா மரைதொழுத பொன் '

இ-ள்:நெஞ்சமானது குளிர மெய்ம்மயிரரும்பி மாற்றமுந் தளரக் கண்ணிலே புனல் தோன்றத் தன்னுருவத்தையும் மறந்தாள் ; புட்குலம் அலைக்காநின்ற மது நிறைந்த தாமரையையுடைய பழனஞ் சூழ்ந்த தில்லைப் பொதுவின்கண்ணே அழகுடைத்தாகிய கூத்தையாடுகின்ற சபாபதியின் பொலிவினையுடைய திருவடித் தாமரையை வணங்கின பொன்னையொப்பாள் என்றவாறு .