48தண்டியலங்காரம்

மலரையும் மிருதுவாகிய நோக்கத்தையுடைய மானையும், காவி மலரையும், சேலையும், மாவடுவையும்,செவ்விய சரத்தினையும் போலும் என்றவாறு.

ஆல்-ஆசை. தே-மது.

வி-ரை:இதன்கண் கண்ணாகிய ஒரு பொருளுக்கு வேல்,கருவிளை மலர், மான், நீலம், மீன், மாவடு, அம்பு ஆகிய பல பொருள்களையும் உவமை கூறப்பட்டித்தலின் இது பல பொருளுவமை யாயிற்று.

(க எ) விகார வுவமை என்பது ஓர் உவமையை விகாரப்படுத்தி யுவமிப்பது.

எ-டு: 'சீத மதியி னொளியுஞ் செழுங்கமலப்
போதின் புதுமலர்ச்சி யுங்கொண்டு-வேதாதன்
கைம்மலரா லன்றிக் கருத்தால் வகுத்தமைத்தான்
மொய்ம்மலர்ப்பூங் கோதை முகம்,'

இ-ள்: செறிந்த மலர்களாற் பொலிவு பெற்ற கூந்தலினையுடையாள் முகத்தினைப் பிரமன், குளிர்ந்த மதியின்கண் உண்டாகிய ஒளியினையும், செழித்த கமலப்போதில் உண்டாகிய புதிய மலர்ச்சியையுங் கொண்டு, தன் கைத்தாமரையினாலன்றித் தன்னுள்ளக் கருத்தால் வகுத்து அமைத்தான் என்றவாறு.

செழுமை-வளப்பம். போது--பூ. வேதா-அயன். கருத்து-உள்ளம். வகுத்தல்-செய்தல். அமைத்தல்-முடித்தல். மொய்ம்மலர்-செறிமலர்.

'முத்துக்கூர்த் தன்ன முளையிளங் கூரெயிற்று
மணிதொடுத் தன்ன வைம்பான் மறுத்துடைத்து
மதியம்வைத் தன்ன வாண்முகத் தொருத்தி,'

என்பதூஉம் அது,

வி-ரை:'சீதமதியின்...முகம்' -இப்பாடலில், முகத்திற்கு உவமையாகக் கூறப்படும் மதி, மலர் ஆகிய இரண்டையும் முழுமையாக உவமமாக்கிக் கூறாது அவற்றின் ஒளி,மலர்ச்சி ஆகிய இரண்டை மட்டுமே பிரித்து உவமையாகக் கூறப்பட்டிருத்தலின் இது விகாரவுவமை யாயிற்று.
மதியினின்று ஒளியையும்,மலரினின்று மலர்ச்சியையும் பிரித்தல் விகாரமாம்.

'முத்துக் கூர்த்தன்ன...ஒருத்தி' என்பதன் பொருள்-முத்துக்களைக் கூர்மையாக்கினாற்போல முளைத்த இளமையான கூரிய பற்களையும், நீலமணியை ஒழுக வைத்தாற்போன்ற கூந்தலையும்,களங்கத்தைத் துடைத்துச் சந்திரனை வைத்தாற்போன்ற ஒளி பொருந்திய முகத்தையும் உடைய ஒருத்தி என்பதாகும்.

ஒரு பெண்ணின் பற்கள், கூந்தல், முகம் ஆகியவற்றிற்கு முத்துக்கள், நீலமணி, சந்திரன் ஆகிய பொருள்களை இயல்பாக உவமையாக்காமல் விகாரப்படுத்தி உவமித்தலின் இது விகாரவுவமை யாயிற்று. முத்துக்களைக் கூர்மையாக்கியதும், நீலமணிகளை ஒருங்கு தொகுத்தலும், சந்திரனினின்று களங்கத்தைத் துடைத்தலும் விகாரமாம்.

(க அ) மோகவுவமை என்பது ஒரு பொருள்மேல் எழுந்த வேட்கையான் வந்த உள்ள மயங்கந் தோன்ற உரைப்பது.