எழிலும் தாமாக ஒன்றின், இம்முகத்தை யொக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே அது பிறரால் (பிரமனால்) விகாரப்பட்டதாகக் கூறி உவமித்ததாயிற்று. இது தாமாக விகாரப்படின் உவமையாம் என்பதாயிற்று. இவை தம்முள் வேற்றுமை.
20. பலவயிற்போலி யுவமை என்பது ஒரு தொடர்மொழிக்கண் பல உவமை வந்தால், வந்த உவமைதோறும் உவமைச் சொல் தோன்றப் புணர்ப்பது.
எ-டு : 'மலர்வாவி போல்வரான் மாதர் கமல
மலர்போலு மாதர் வதனம்-மலர்சூழ்
அளிக்குலங்கள் போலு மளக மதனுட்
களிக்குங் கயல்போலுங் கண்'
இ-ள்: கமல மலர்ந்த வாவி போல்வார் மாதர்; கமல மலர் போலும் மாதர் வதனம் ; மலர் சூழ்ந்த வண்டின் குலம் போலும் அளகம்; அதனுள் களித்து உகளாநின்ற கயல்போலுங் கண்கள் எ - று.
வதனம் - முகம், அளிக்குலம் - வண்டின் திரள்.
வி-ரை:பலவயின் பலவிடத்தும். இதன்கண் அடிதொறும் உவமிக்கப்பட்டு, அங்ஙனம் உவமிக்கப்பட்ட இடங்களிலெல்லாம் போல என்னும் உரும உருபு வந்தமையின் இது பலவயிற்போலி யுவமை யாயிற்று.
21. ஒருவயிற்போலி யுவமை என்பது ஒரு தொடர் மொழிக்கண் பலவுவமை வந்தால், அவ்வந்த உவமைதோறும் உவமைச்சொற் புணராது,ஓர் உவமைச் சொற் புணர்ப்பது.
எ-டு : 'நிழற் கோப மல்க நிறைமலர்ப்பூங் காயா
சுழற்கலவ மேல்விரித்த தோகை - தழற்குலவு
தீம்புகை யூட்டுஞ் செறிகுழலார் போலுங்கார்
யாம்பிரிந்தோர்க் கென்னா மினி'
இ-ள்: காயாமலரின் நிழலின்கண் இந்திர கோபஞ் செறிய, அப்பொலிவினை யுடைய காயாவின் நிறைந்த மலரின் சூழலிலே தன் கலாபத்தை விரித்த மயிலானது தழலின்கண் தோன்றிய நறும்புகையினையூட்டும் செறிந்த குழலினையுடைய மடவாரைப் போலுங் கார்காலம் ; யாம் பிரிந்து போகப்பட்டாருக்கு என்னாம் இனி? எ-று.
நிழல் - காயா நிழல். கோபம் - இந்திரகோபம். அல்க - தங்க. சுழல் - தழைப்பு. கலவம் - பீலி. விரித்தல் - ஆடுதல். தோகை - மயில். குலவல் - உண்டாதல். தீம்புகை - அகிற்புகை. கார்-கார்ப்பருவம்.
வி-ரை:ஒரு தொடர்மொழிக்கண் - ஒரு நிகழ்ச்சி பற்றிய வருணனையிடத்து. இப்பாடலில் கார்காலம் பற்றிய நிகழ்ச்சி கூறப்படுகின்றது. அக்கார்காலத்தைக் கண்டு மகிழும் மயிலுக்குத் தழற்புகை யூட்டும் பெண்களை உவமையாகக் கூறுகின்ற பொழுது, மயில் பெண்களை ஒக்கும் என்றவிடத்து மட்டும் 'போலும்' என்ற உருபை விரித்து, ஏனைய இடங்களில் எல்லாம் அவ்வுருபை விரியாமையின் இது ஒருவயிற்போலியுவமை யாயிற்று. இந்திர கோபத்தை நெருப்பாகவும், மயில் தோகையைத் தீம்புகையாகவும் உவமிக்கப்பட்ட பொழுது அவ்வுவம வுருபு இல்லாதிருத்தல் காண்க. ஒருவயின்-ஓரிடத்து மட்டும்.