எ-டு : 'மலயத்து மாதவனே போன்றும் அவன்பால்
அலைகடலே போன்றும் அதனுட் - குலவும்
நிலவலய மேபோன்றும் நேரியன்பா னிற்கும்
சிலைகெழுதோள் வேந்தர் திரு '
(இ-ள்) பொதிய மலையிடத்து அகத்தியனைப் போன்றும் , அவன் உண்ணப்பட்ட அலையையுடைய கடல்போன்றும் , அதனுள் உண்டாகிய நிலாவட்டம் போன்றும் , சோழனுடைய இடத்தே பேராதே நிற்கும் , விற்பயின்ற தோள்களையுடைய வேந்தர் செல்வம் எ-று .
வி-ரை: இதன்கண் சோழனைவிட்டு நீங்காத செல்வத்திற்கு மூன்று உவமைகள் தரப்பட்டு , அம்மூன்றும் ஒன்றின் ஒன்று தொடர்ச்சியுடையவாகப் புணர்க்கப் பட்டுள்ளமையானும் , இறுதியில் அப்பொருளைக் (உபமேயத்தை ) கூறி முடித்திருப்பதானும் இது மாலையுவமையாயிற்று .
உவமை பிற அணிகளுடன் கூடிவரும் எனல்
32. அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோதம்
ஒப்புமைக் கூட்டந் தற்குறிப் பேற்றம்
விலக்கே யேதுவென வேண்டவும் படுமே .
எ-ன் , அவ்வுவமை யலங்காரம் பிற அலங்காரங்களோடுங் கூடிவருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) அற்புதமும் , சிலேடையும் , அதிசயமும் , விரோதமும் ஒப்புமைக் கூட்டமும் , தற்குறிப்பேற்றமும் , விலக்கும் , ஏதுவும் எனச் சொல்லப்பட்ட எட்டு அலங்காரங்களோடு கூடியும் வரும் அவ்வுவமை யலங்காரம் எ-று .
அவை அற்புதவுவமை , சிலேடையுவமை , அதிசயவுவமை , விரோதவுவமை , ஒப்புமைக்கூட்டவுவமை , தற்குறிப்பேற்றவுவமை , விலக்குவமை , ஏதுவுவமை எனப்பெயர் கொடுத்து வழங்கப்படும் .
(1) அற்புதவுவமை
அவற்றுள் ,
எ-டு : குழையருகு தாழக் குனிபுருவந் தாங்கி
உழைய ருயிர்பருகி நீண்ட - விழியுடைத்தாய்
வண்டே றிருளளகஞ் சூழ வருமதியொன்
றுண்டேல் இவள்முகத்திற் கொப்பு '
(இ-ள்) குழை தாழ்ந்த முகத்தினை யுடைத்தாய் , வளைந்த புருவத்தினை யுடைத்தாய்ப் , பக்கத்தினின்றுங் கண்டாருடைய உயிரை உண்டு வளர்ந்த கண்களையுடைத்தாய்ச் , சுரும்புகளாலே மேவப்பட்டிருக்குங் குழலைச் சூழக்கொண்டு வருவதொரு மதிய முண்டாயின் இவளுடைய முகத்திற்கு ஒப்பாம் எ-று .
வி-ரை: அற்புத அணி முதலாக வுள்ள எட்டணிகளோடும் உவமையணி வரும் என்றார் ; இனி அவற்றிற்கு முறையே எடுத்துக்காட்டுத் தருகின்றார் . இவ்வெட்டனுள் முதற் கண்ணுள்ளது அற்புத அணியாம் . பொருளணியியலுள் கூறப்பட்ட முப்பத்தைந்தணிகளுள் அற்புத அணியென்பது ஒன்றில்லை . எனினும் எண்வகை மெய்ப்பாட்டினிடமாகப் பிறக்கும் சுவையணியில் வியப்புச் சுவையில் இது அடங்கும் என்க .