இப்பாடலிலுள்ள சொற்கள் கவிக்கும் , முகத்திற்கும் , ஒரே தன்மைத்தாய் நின்று பொருள்படுவதால் செம்மொழிச் சிலேடையாயிற்று . கூறப்பட்ட இருபொருளில் கவியை முகத்திற்கு உவமை கூறுதலின் உவமையுமாயிற்று . எனவே இது செம்மொழிச் சிலேடையுவமையாம் .
இனி , பிரிமொழிச் சிலேடையுவமை .
எ-டு : 'நளிதடத்த வல்லியின் கண்ணெகிழ ஞாலத்
தளவி னிறைகடாஞ் சிந்திக் - களிறிகலும்
கந்த மலையா நிலவுங் கவடசைய
வந்த மலையா நிலம் '
(இ-ள்) செறிவினையும் பெருமையினையுமுடைய காலிலே , செறிந்திருக்கின்ற விலங்கின் கண்அறத் தரைமீது நிறைந்த கடாம் பொழியத் தறியைச் சீறிப் புரசைக் கயிறு அசையவரும் யானைபோன்று , தென்றல் பெரிய பொய்கைப் பூவல்லித் தேன்சோர உலகத்தார் நிறைகளையழித்து விரைகமழ நெருங்கிய பணைகளையசைத்து வருகின்றது எ-று .
யானையின்மேற் செல்லுங்கால் : நளி - செறிவு , தடம் - பெருமை , வல்லி - விலங்கு , கண் - மூட்டுவாய் , நெகிழ்தல் - கழலுதல் , ஞாலம் - பூமி , நிறைகடாம் - பெரிய மதம் , சிந்தி - பொழிய , கந்தம் - தறி , மலையா - சீறா , நிலவுதல் - பொருந்துதல் , கவடு - புரசைக்கயிறு . அசைய - ஆட , வந்த - வரும் எனவும் ; தென்றல் மேற் செல்லுங்கால் : நளி - பெருமை , தடம் - பொய்கை , அல்லி - பூ , கள் - தேன் , நெகிழ்தல் - சோர்தல் , ஞாலம் - உலகம் , நிறை - ஒழுக்கம் , சிந்தி - அழித்து , கந்தம் - விரை , அலைதல் - நாறுதல் , நிலவுதல் - நெருங்குதல் , கவடு - மரக்கொம்பு , அசைதல் - அலைதல் எனவும் வரும் .
இதனைச் 'சந்தான வுவமை' என்பாருமுளர் . சந்தானம் என்பது இரண்டு பொருளுக்கும் உபகாரமாயிருக்குஞ் சொற்களாலே பாடப்படுவது .
இதனை இவ்வாறு வேறுபடுத்திக் காட்டியது என்னை ? எனின் , 1மேல் பண்பு முதலியனவேயன்றிச் சொற்பொதுமை காரணமாகவும் உவமை புணர்க்கப்படும் என்றார் ; அது காட்டற்கு என்க .
வி-ரை: புரசைக் கயிறு - யானை கட்டும் கயிறு . இப்பாடலிலுள்ள சொற்கள் யானைக்கும் தென்றற்காற்றிற்கும் பொதுமையாக நிற்றலானும் , அவற்றுள் பெரும்பாலான சொற்கள் ஒவ்வொரு பொருட்கும் ஒவ்வொரு விதமாகப் பிரிந்து பொருள்படுதலானும் பிரிமொழிச் சிலேடையாயிற்று . யானையைத் தென்றல் காற்றிற்கு உவமை கூறலின் உவமையாயிற்று . எனவே இது பிரிமொழிச் சிலேடையுவமையாம் .
3. அதிசயவுவமை
எ-டு : ' நின்னுழையே நின்முகங் காண்டும் நெடுந்தடம்
தன்னுழையே தன்னையுங் காண்குவம் - என்னும்
இதுவொன்று மேயன்றி வேற்றுமை யுண்டோ
மதுவொன்று செந்தா மரைக்கு '
1. 30 - ஆம் நூற்பா உரை காண்க .