பொருளணியியல்75

இ-ள்:வளப்பம் பொருந்திய வாள்போன்ற மதர்த்த கண்களையுடைய மான் போன்ற பெண், மலையில் வாழாத இளமயிலும்,கடலினது அலையிலே பிறவாத அமுதமும், விலையிட்டுக் கூற முடியாத முத்தும், உண்ண முடியாததோர் தேனுமாவள் என்பதாம்.

இப்பாடலில் ஒரு பெண்ணை மயில், அமுதம், நித்திலம், தேன் என உருவகிக்குங்கால், அவ்வப் பொருள்களின் தன்மையினின்றும் விலக்கி உருவகம் செய்யப்பட்டிருத்தலால் இது விலக்குருவகமாயிற்று.

முன்னர்க் கூறப்பட்ட விலக்குருவகத்திற்கும் (பக் - 71) இதற்கும் வேற்றுமை: ஆண்டு உருவகிக்கப்பட்ட பின்பு விலக்கப்பட்டுள்ளது. ஈண்டு உருவகிப்பதற்கு முன்பு விலக்கப்பட்டுள்ளது.

4. சிறப்புருவகம்

'எ-டு: 'மழலைவாய் நவ்வி மதர்நெடுங்கண் மஞ்ஞை
குழலின் 1பொறைமெலிந்த கொம்பர் - சுழல்கலவந்
தாங்கிய அன்னந் தடங்கொங்கை ஆரமுதம்
தேங்கொள் கமலத் திரு.'

கலவம் - தோகை.

வி-ரை:ஒன்றனை உருவகிக்குங்கால், அவ்வுருவகப் பொருளுக் கில்லாத சிறப்பினையேற்றி உருவகிப்பது சிறப்புருவகமாகும்.

இ-ள்: தேனைத் தன்னகத்தே கொண்ட செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளாகிய பெண். மழலைச் சொற்களைப் பேசும் வாயையுடைய மானும், வளப்பம் பொருந்திய நீண்ட கண்களை யுடைய மயிலும், கூந்தலின் சுமையைத்  தாங்குதலால் மெலிவுற்ற கொம்பும், திரண்ட தோகையை யுடைய அன்னமும் பெருத்த கொங்கைகளையுடைய அமுதமும் ஆவள் என்பதாம்.

இப்பாடலில் ஒரு பெண்ணை மான், மயில், கொம்பு, அன்னம், அமுதம் ஆக உருவகிக்குங்கால் அவ்வப்பொருள்களிடத்தும் இல்லாத்தான மழலைவாய்,மதர்நெடுங்கண், குழலின் பொறை மெலிதல், கலவம் தாங்கல், தடங்கொங்கை யுடைத்தாதல் ஆகிய சிறப்புக்களை ஏற்றி உருவகித்துள்ளமையின் இது சிறப்புருவக மாயிற்று.

முன்னர்க்கூறிய (பக்-71) சிறப்புருவகத்திற்கும், இதற்கும் வேற்றுமை:- ஒரு பொருளுக்கு இன்றியமையாததாயுள்ள (சிறந்த) பொருள்களை உருவகமாக்கி யுரைப்பது முற்கூறிய சிறப்புருவகமாம். (உலகாகிய ஒரு பொருளுக்கு இன்றியமையாததாக விளங்கும் படைப்புக் கடவுள், நீர், காத்தற் கடவுள் ஆகிய மூவரையும் ஆங்கு உருவகிக்கப் பட்டமை காண்க) ஒரு பொருளை எவ்வெப்பொருள்களாக உருவகிக்கப் படுகின்றதோ அவ்வப்பொருள்களிடத்தும் இல்லாததான சிறப்பான அடை மொழிகளை கொடுத்து உருவகிப்பது ஈண்டுக் கூறப்பட் சிறப்புருவகமாகும்.


1. 'பொறை மலிந்த' என்பதும், 'பொறை சுமந்த' என்பதும் பாடமாகும்.