பொருளணியியல்77

வி-ரை: ஒரு பொருளுக்குப் பலபொருளை உவமை கூறின் அது பலபொருளுவமையாம்.

இ-ள்: அவனது அடிகளை நோக்கின் ஆழமுடைய கடலின் நிறத்தையுடைய திருமாலாகத் தோன்றுகின்றான்; மற்றும் அவனுடைய வடிவத்தை நோக்கின் பசிய கொன்றை யணிந்த சிவபெருமான் போலத் தோன்றுகின்றான்; இங்ஙனம் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு பொருளாகத் தோன்றுகின்ற அவனுடைய முடியை இறுதியில் நோக்க அவ்விடத்து ஆத்திமாலையிருக்கக்கண்டு அவனைத் தேரினையுடைய சோழனாகத் தெளிந்தேன் என்பதாம்.

இப்பாடலின்கண் சோழனாகிய ஒருவனுக்குத் திருமால், சிவபெருமான் ஆகிய இருவரையும் உவமை கூறியிருத்தலின் இது பலபொருளுவமையாயிற்று.

முன்னர்க் (பக்-47) கூறப்பட்ட பலபொருளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு;- ஆண்டு ஒரு பொருளுக்கே பல பொருள்களை உவமை கூறப்பட்டது. ஈண்டு ஒரு பொருளில் ஒவ்வொரு பகுதியையும் நோக்கி ஒவ்வொரு உவமை கூறப்பட்டுள்ளது.

பலவயிற்போலி யுவமைக்கும் (பக்- 50) இதற்கும் உள்ள வேறுபாடு;- ஆண்டு ஒரு பொருளிலுள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொரு உவமை கூறப்பட்டு, அவ்வவ்விடத்தெல்லாம் உவம உருபும் விரிந்து நின்றது. ஈண்டு ஒரு பொருளில் ஒவ்வொரு பகுதியையும் நோக்கி உவமை மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆதலில் அதனின் வேறாயிற்று.

3. பண்புவமை

எ-டு; 'கருங்கால் வேங்கை வீயுறு துறுகல்
இரும்புலிக் குருளையில் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே' -குறுந் -47

வி-ரை: ஒரு பொருளொடு பொருளைப் பண்புபற்றி உவமை கூறுதல் பண்புவமையாம்.

இ-ள்: பரந்த வெண்ணிலவே! கரிய அடிப்பகுதியையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் பரவப்பெற்ற வலிய கல்லானது, பெரிய புலியினது குட்டியைப் போலத் தோன்றும் காட்டிடத்தே, இரவில் களவிடத்துத் தனித்துவரும் எம் தலைவருக்கு நீ நன்மை செய்யமாட்டாய் என்பதாம்.
இது தோழி கூற்று.

வேங்கைமலர் பரவப்பெற்ற கல், வண்ணத்தாலும், வடிவத்தாலும் கோடுகளையுடைய புலிக் குட்டியைப் போல் தோன்றும் என்பதால், இது பண்புவமையாயிற்று.

4. 1ஒப்புவமை

எ-டு; 'முத்துக்கோத் தன்ன முறுவல் முறுவலே
ஒத்தரும்பு முல்லைக் கொடிமருங்குல்-மற்றதன்மேல்
மின்னளிக்கும் கார்போல் விரைக்கூந்தல் மெல்லியலாள்
தண்ணளிக்கும் உண்டோ தரம்'


1. 'மெய்யுவமை' என்பதும் பாடம்.