வி-ரை: இப்பாடல் தலைவனைத் தோழி செலவழுங்குவித்ததாகும். எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சியைக் கூறி விலக்குவது எதிர்வினை விலக்காம்.
'தீவாய் நெடுவாடை வந்தால்' என எதிர்கால நிகழ்ச்சி கூறி, அப்பொழுது 'செயலறியேன்' என்பதால் அச்செலவு விலக்குவித்தலின், இது .எதிர்வினை விலக்காயிற்று.
3. நிகழ்வினை விலக்கு
எ-டு 'மாதர் நுழைமருங்குல் நோவ மணிக்குழைசேர்
காதின் மிகைநீலங் கைபுனைவீர்-மீதுலவு
நீணீல வாட்கண் நெடுங்கடையே செய்யாவோ
நாணீலஞ் செய்யும் நலம் '
இ-ள்: காதலைச் செய்யும் நுண்ணிடை வருந்த, மணிக்குழையையுடைய உமது காதின்மீதே மிகையாக நீலப்பூவைச் சாத்துகின்றவரே! அக்காதின் மீதே உலாவுகின்ற நீண்ட நீலமாகிய நிறத்தையுடைய கண்களின் நெடிய கடையே செய்யாவோ, நீவீர் நன்றாகச் சூடிய நீலப்பூச் செய்யும் நலத்தை எ-று.
பிறவும் வந்த வழிக் கண்டுகொள்க.
வி-ரை: நிகழ்காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை விலக்குவது நிகழ்வினை விலக்காம். இப்பாடல் தலைவன், தலைவியின் நலம் பாராட்டல் என்னும் துறையைச் சேர்ந்ததாகும்.
நீலநிறம் பொருந்திய அழகிய கடைக்கண் நோக்கினையுடைய தலைவியொருத்தி , காதில் நீலோற்பல மலரையும் அணிந்தனள் . இது நிகழ்வினையாம் . அதனைக் கண்ட தலைவன் ஒருவன் , நீலோற்பல மலர் செய்யும் அழகைக் கடைக்கண்ணே செய்வதாயிருக்க , அம்மலரணிதல் மிகையன்றோ எனக் கூறுமுகமாக அம்மலரணிதலை விலக்குவதால் , நிகழ்வினை விலக்காயிற்று .
அதன் வகை
43. அதுவே
பொருள்குணங் காரணங் காரியம் புணரும் .
எ-ன் , அவ்வலங்காரத்துச் சில வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று .
இ-ள்: அவ்விலக்கு பொருள் விலக்கும் , குண விலக்கும் , காரணவிலக்கும் , காரிய விலக்கும் என நான்கு வகையானும் வரும் எ-று .
அவற்றுள் ,
1. பொருள் விலக்கு
எ-டு : ' கண்ணும் மனமுங் கவர்ந்தவள் ஆடிடமென்
றண்ணல் அருளும் அடையாளந் - தண்ணிழலின்
சுற்றெல்லை கொண்டுலவுஞ் சோதித் திரளல்லால்
மற்றில்லை காணும் வடிவு '
1. சுன்னாகம் திரு . குமாரசாமிப் புலவர் அவர்கள் இறந்தகால விலக்கு நிகழ்கால விலக்கு , எதிர்கால விலக்கு எனக் குறிப்பர் .