தமிழ்மொழியில் பண்டைக்காலத்தில் இயற்றமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று பகுப்பினதாக அமைந்தது. தொல்காப்பியனார் காலத்தே இம்மூன்று பகுதிகளையே காண்கிறோம். பின் இறையனார் களவியல்உரை எழுத்து, சொல், பொருள், யாப்பு என்ற நான்கு பகுப்புக்களைக் குறிப்பிடுகிறது. அணியிலக்கணம் தமிழிலும் விரிவாகத் தோன்றவே, இடைக்காலச் சோழர்கள் காலத்தில் தமிழ் இலக்கணம் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்ற ஐம்பகுப்பினதாயிற்று.
பொருள்இலக்கணம் தமிழ்மொழியில் தனிச்சிறப்பிற்று. அஃது அகம் எனவும், புறம் எனவும் இருபகுதிப்பட்டது. அகப்பொருள் பற்றிய சங்கச் சான்றோர் பாடல்கள் பலவாக இருத்தலைக் காண்கின்றோம். தொல்காப்பியனார் அகப்பொருள் இலக்கணத்தை அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்ற நான்கு இயல்களான் விளக்கிய தனோடு அமையாது, அகப்பொருள்பற்றிய செய்திகளை மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல் என்ற இயல்களிலும் விரிவாகச் சுட்டிச் செல்கிறார்.
சங்கப்பாடல்கள் பொருள்தொடர்நிலையாக அமையாமல் தனித்தனிப் பாடல்களாக அமைந்தமையின், அக்காலத்தவராகிய தொல்காப்பியனார், தலைவன்கூற்று தலைவிகூற்று தோழிகூற்று எனப் பலவகைக் கூற்று வகைகளைத் தொகுத்துச் சுட்டினாரே யன்றி, அகப்பொருட்செய்திகளைத் தொடக்கம் முதல் இறுதி காறும் தொடர்பாகக் கூறினார் அல்லர். ஆனால் கோவை நூல்கள் அகப்பொருட் செய்திகளைக் கோவையாகக் கூறத் தொடங்கிவிட்டன. திருச்சிற்றம்பலக் கோவை |
|
|
|