Primary tabs
செய்தி, வரைவியற்செய்தி, கற்பியற்செய்தி என்பனவும் ஒழிபியற்பகுதியும் வகுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. நூலை எளிதின் உணரப் பதிப்பாசிரியர் தந்துள்ள விளக்கங்கள் [ ] குறிக்குள்ளும், விளக்கம் என்ற தலைப்பிலும் ஆங்காங்குப் பிரித்துணரும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நம்பியகப் பொருளை அடியொற்றித் தொல்காப்பியப் பொருட்படல அகத்திணையியல் களவியல் கற்பியல் வரைவியல் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் ஆகியவற்றின் செய்திகளையும் உரைகளையும் ஆசிரியர் விளக்கமாகக் கூறிச் செல்வதால், இவ்வியல் இப்பொருட்படலத்திலேயே மிகப்பெரிய இயலாக அமைந்துள்ளது.
தொல்காப்பிய மெய்ப்பாட்டியற் செய்திகள் பலவும் பேராசிரியர் உரையும் அமைந்துள்ள ஒழிபியற்பகுதி கற்பார் நலம்கருதி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இவ்வியலின் இறுதியில் நூற்பா முதற்குறிப்பு அகரவரிசை, எடுத்துக்காட்டுப்பாடல் முதற்குறிப்பு அகரவரிசை முதலியவற்றோடு துறை அகரவரிசையும், பொருள் அகர வரிசையும், ஒத்தநூற்பாக்கள அகரவரிசையும், அருஞ்சொற் பொருள் அகரவரிசையும் இணைக்கப்பட்டுள்ளன.
இதனைப்பதிப்பிக்குமாறு எனக்கு வாய்ப்பளித்துப் பதிப்பிக்கும் முறையைக் குறிப்பிட்ட தஞ்சை சரசுவதிமகால் கௌரவ காரியதரிசியாகிய திருவாளர் முதுபெரும்புலவர் நீ. கந்தசாமிப்பிள்ளையவர்களுக்கும், பதிப்பித்துள்ள வெற்றிவேல் அச்சகத்தாருக்கும் என் நன்றி உரியதாகுக.
பலகுறைபாடுகளுக்கிடையே அச்சிற்போந்துள்ள இந்நூலில் சிற்சில பிழைகள் உள்ளன. அவற்றைப் பொறுக்குமாறு தமிழ்கூறு நல்லுலகத்தை வேண்டி, என்னைத்தோன்றாத் துணையாய் இத்தகைய நற்பணிக்கண் உய்க்கும் ஐயாறன் அடியிணை இறைஞ்சி இப்பணியினைத் தொடர்கின்றேன்.
46, மேலமடவளாகம்
திருவையாறு
தி.வே. கோபாலையர்