பக்கம் எண் :

 

அணியியல் - முன்னுரை

தோற்றுவாய்
                      

     இன்று தமிழில் உள்ள நூல்களில் காலத்தானும் தகுதியானும் முற்பட்டதாகிய
 தொல்காப்பியப் பொருட்படலத்தில் உவமவியல் என்பதோரியல் அப்படல ஏழாம்
 இயலாக அமைந்துள்ளது. தொல்காப்பியனார் காலத்தில் உவமம் ஓரணியாகக்
 கொள்ளப்படவில்லை. பொருள் புலப்படுக்கும் கருவிகளில் அதுவும் ஒன்றாகவே
 கொள்ளப்பட்டது. "உவமத்தோற்றம்" என்ற தொடருக்குப் பேராசிரியர் உவமத்தால்
 பொருள் தோன்றும் தோற்றம் என்று உரை வரைந்து, உவமம் பொருளைப்
 புலப்படுக்கும் கருவிகளில் ஒன்றே என்பதனை விளக்குகிறார். "உவமத்தை அணி
 என்றல் கூடாது ; சாத்தனிடமிருந்து அவன் அணியும் அணிகளை பிரித்துக் காண்பது
 போலப் பாடல்களிலிருந்து உவமத்தைப் பிரித்துக்காண்டல் இயலாது ஆகலான்"
 என்பது அவர்தம் கருத்து.

     அணியிலக்கணம் என்பதுதொல்காப்பியனாருக்குப் பிற்பட்ட காலத்திலேயே
 தோன்றுவதாயிற்று. உவமை என்ற ஓரணியிலிருந்தே ஏனைய அணிகள் பெருகின
 என்பது ஒருசாரார் கருத்து.

    "உவமை என்னும் தவலருங் கூத்தி
     பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து
     காப்பிய அரங்கில் கவின்பெறத் தோன்றி
     யாப்புஅறி புலவர் இதயம்
     நீப்பறு மகிழ்ச்சி பூப்பநடிக் கும்மே"

 என்ற கருத்து நிலவி வரலாயிற்று.