30
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
மாலைகள் கமழ, வாத்தியங்கள் ஒலிக்க, சுமங்கலி மங்கையர் வாழ்த்த,
வெளியது உடுத்துப்
புலவனையும் வெளியது உடுக்கச் செய்து, அவனைத்
தக்க ஆசனத்து அமர்த்தித் திசையிலுள்ளார் புகழ
இயற்றிய செய்யுளை
ஏற்றுக்கொண்டு, அவனுக்கு மருதநிலம் பேரணிகள் பொன் யானை
அணிசெய்யப்பட்ட
தேர் குதிரை ஆகியவற்றைப் பரிசில் நல்கி, ஏழடி
பின்சென்று அவனை அவன் இல்லத்துக்கு அனுப்பி
மீளுதல் வேண்டும்
என்று சான்றோர் வகுத்துள்ளனர்.
புரவலன் சிறப்பு
பத்துவகைப் பொருத்தமும் அமைந்த முதற்பா முதற் சீரைக் கொண்ட
நன்மைதரும் பிரபந்தத்தைப்
பெற்ற புரவலன் புகழால் நிறைமதி போலவும்
உருவத்தால் இளஞாயிறு போலவும் சிறந்து இந்நிலவுலகில்
சிறப்போடு
வீற்றிருப்பான்.
நூற்புறனடை
பலபகுதியாகப் பரந்துபட்ட பொருளிலக்கணத்தைச் சொற்களின்
துணைகொண்டு இத்துணைத்து
என்று வரையறுத்து உணர்த்துதல் இயலாது
எனினும் சொல்லப்பட்டவற்றைக் கொண்டு அவற்றொடு தொடர்புடைய
ஏனையவற்றையும் கூறவல்ல சான்றோர்கள் இவ்வுலகில் சூரியனைப்போன்ற
பிரகாசத்துடன் கலைமகளும்
திருமகளும் தம்மிடம் நிலைபெற, மலைமகளை
ஒருபாகமாகக் கொண்டுள்ள சிவபெருமானைப்போல உலகிற்கு
இன்பம்
செய்து நெடுங்காலம் நீடு வாழ்வர்.
என்ற செய்திகள் பாட்டியலில் கூறப்பட்டுள்ளன.
|