இலக்கண விளக்கம் பாயிரம் பொதுப்பாயிரம் க. ஆவது. பொதுப்பாயிரத்து இலக்கணம் திரு விளங்கிய மாநகரத்திற்கு உரு விளங்கிய வாயில் மாடங்கள் போலவும், கற்றுவல்ல கணவற்குக் கற்பு உடை மனையாள் போலவும், தலை அமைந்த யானைக்கு வினை அமைந்த பாகன் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கம் ஆகிய திங்களும் ஞாயிறும் போலவும் நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்று ஆகலானும், கொழுச்சென்ற வழித்துன்னூசி இனிது செல்லுமாறுபோலப்பருப்பொருட்டு ஆகிய பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருட்டு ஆகிய நூல் இனிது விளங்கும் என்ப ஆகலானும், அது கேளாக்கால் குன்று முட்டிய குரீஇப்போலவும் குறிச்சிபுக்க மான் போலவும் மாணாக்கன் இடர்ப்படும் ஆகலானும், ‘ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும், பாயிரம் இல்லது பனுவல் அன்றே’ என்ப ஆகலானும், எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது மரபு. பொதுப்பாயிரத்நைன்னூலார் தனித்தனி அமைந்த ஐம்பத்தைந்து நூற்பாக்களான் விளக்கியுள்ளார். ஆனால் இந்நூலாசிரியர் நூற்பாக்கள் இடைமிடைந்த உரைகொடு விளக்கிக் கூறுகிறார். |