பக்கம் எண் :

2

உரை விளக்கம் :- திருவிளங்கிய மாநகரம்-செல்வச் சிறப்பான் மிக்க கோநகரம். உரு அமைந்த வாயில் மாடம்-தோற்றப் பொலிவுமிக்க கோபுரம். பாயிரம் நூலுக்கு இன்றியமையாதது என்பது நான்கு உவமங்களான் விளக்கப்படுகிறது. வாயில் மாடம் நகர்க்குள் செல்வதற்கு வழியாகலொடு அணிசெயல் உடைத்து; அதுபோலப் பாயிரம் நூலுள் செல்லற்கு வழியாதலொடு நூற்கு அணி செயல் உடைத்து. பாகன், அடங்கா யானையை அடக்கித் தன் குறிப்பின்வழி நடத்துவான். பொதுப்பாயிரம் தன்னை உணர்தலின் வளர்ச்சிக்குத்தக, இடர்ப்பாடு என்னும் கடுமையை நீக்கி நூலினை விளக்கும்; அந்நூற்கு அழகு செய்யும்; மாணாக்கன் உணர்ச்சிக்குப் பொருளான் அடங்காது தோன்றும் நூலினைத் தன் குறிப்பான் அடங்குமாறு காட்டி நடத்தும். திங்கள் கலையின் வளர்ச்சிக்குத் தகப்புறத்து இருள் நீக்கி ஆகாயத்தை விளக்கும்; ஆகாயத்திற்கு அழகு செய்யும். அதுபோலப் பாயிரம் மாணாக்கன் அறிவு வளர்ச்சிக்குத்தக அறியாமை என்னும் இருள் நீக்கி நூற்பொருள் விளக்கி நூற்கு அழகு செய்யும். இவ்வாறு பொதுப்பாயிரத்திற்கு வாயில் மாடமும், பாகனும், திங்களும் உவமங்கள் ஆயின. நூற்கு நகரமும், யானையும், ஆகாயமும் உவமங்கள் ஆயின.

சிறப்புப் பாயிரத்துக்கு ஞாயிறும் கற்புடையாளும் உவமம். நூற்கு ஆகாயமும் கணவனும் உவமம்.

ஞாயிறு எஞ்ஞான்றும் ஒரு படித்தாக ஆகாயத்தை விளக்கும்; சிறப்புப்பாயிரம் பெயர் மாத்திரையே உணர்த்தலின் வளர்தலும் தேய்தலும் இன்றி எஞ்ஞான்றும் ஒரு படித்தாக நூலினை விளக்கும். கற்புடையாள் கணவன் கற்பித்த வழி நிற்றலுடையாள்; அதுபோலச் சிறப்புப்பாயிரம் நூலின் குறிப்பின்வண்ணம்தான் ஒழுகும்.