பக்கம் எண் :

3

இவ்வாறு பொதுப்பாயிரித்துக்கு வாயில் மாடம், பாகன், திங்கள் என்ற மூன்று உவமங்களும், சிறப்புப் பாயிரத்துக்கு ஞாயிறு, கற்புடையாள் என்ற இரண்டு உவமங்களும் கொள்க.

உரையாசிரியர், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள் போல இன்றியமையாச் சிறப்பிற்றாயும், திரு அமைந்த மாநகரத்திற்கு உருஅமைந்த வாயில் மாடம் போல அலங்காரமாதல் சிறப்பிற்றாயும் பாயிரம் வரும் என்பர்.

நச்சினார்க்கினியர், தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும் பாயிரம் நூற்கு இன்றியமையாதது என்பர். இவை யாவும் இறையனார் களவியல் உரையை அடியொற்றிச்சொற்றனவே.

அரசஞ் சண்முகனார் இவற்றையெல்லாம் தொகுத்து, மேலும் சில தலைப்பெய்து, கரு அமைந்த மாநகர்க்கு உருஅமைந்த வாயில் மாடம் போலவும், தகைமாண்ட நெடுஞ் சுவர்க்கு வகைமாண்ட பாவைபோலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும், நாண்துறவாக் குலமகட்கு மாண்துறவா அணியும் ஆடையும்போலவும், தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன் போலவும் கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள் போலவும் பாயிரம் நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்று என்று கூறி, அவற்றை விளக்கியும் வரைந்துள்ளார்.

கொழு என்பது ஊசித் தொளையின் மேலுள்ள கோலினை; துன்னூசி என்பது தைத்தல் தொழில்செய்யும் நூல்கோத்த தொளையை உடைய ஊசியின் காதினை, கொழுவுதலால் கோல் கொழு எனப்பட்டது. கொழு.