பக்கம் எண் :

4

துன்னூசி நுழைதற்கு வழியாக்கல் உடைத்து; அது போலப்பாயிரம் நூல் நுழைதற்கு வழியாக்கல் உடைத்து.

குன்றினை முட்டிய குருவி தலைதகர்ந்து வருந்துமாறு போல, மாணாக்கன் அறிவு சிதறி வருந்துவான் என்பது.

ஊர்க்குள் புக்க காட்டகத்து மான் வழியறியாது தெளிவற்றுத் தடுமாறுவதுபோல, மாணாக்கன் நூலினைப் பயிலும் வழியறியாது திகைத்து அலமருவான் என்பது.

பலதிறப்பட்ட பொருள்களைத் தன்னுள் அடக்கிய பெரியதொரு நூலாயினும், பாயிரம் அமையாதிருப்பின் அக்குறை நீக்குதற்கரியது ஆதலின், நூல் முற்றுப்பெற்ற தொன்றாகக் கருதப்படமாட்டாது. எனவே, எந்த நூலாயினும் முதற்கண் பாயிரம் அமையப்பெறல் வேண்டும்.

நூல் என்பது இலக்கணத்தையே குறிக்கும் பழஞ் சொல். காப்பியங்கள் ‘தொடர்நிலைச் செய்யுள்’ என்ற பெயராலேயே வழங்கப்படல்வேண்டும் என்று நச்சினார்க்கினியர் சிந்தாமணி முதற்பாடல் உரையில் கூறியிருப்பது நோக்கத்தக்கது.

அப்பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து
‘பாயிரம் பொதுச் சிறப்பென இருபாற்றே’

என்ப ஆகலின்,                                               நன்-2

ஈவோன் தன்மை முதலாயின தன்னால் உரைக்கப்படும் நூற்கே உரிய அன்றி எல்லா நூல்முகத்தும் உரைக்கப்படுதலின் அவற்றை உணர்த்தும் பாயிரம் பொது எனவும், ஆக்கியோன் பெயர் முதலியன தன்னால் உரைக்கப்படும் நூற்கே உரியவாய் அவ்வொரு நூல் முகத்துமே உரைக்கப்படுதலின் அவற்றை உணர்த்தும் பாயிரம் சிறப்பு எனவும் ஆயின என்க.