14 முடத்தெங்கு என்பது ஏனைய தெங்கின் நெருக்கத்தினால் ஞாயிற்றின் ஒளிபடாமல், காய்த்தற்குக் காரணமாகிய பாளைஏதுமின்றி ஓலையேயுடைய தென்னையை உணர்த்திற்று. நன்னூலார் முதலாயினார் கூறுவது போலப் பொருள் கொள்வதற்குக் ‘கூனித்தெங்கு’ என்ற தொடர் பயன்படுமேயன்றி முடத்தெங்கு என்ற தொடர் பயன்படாது. இனிக் குண்டிகைப் பருத்தி என்பது நீர்க்கரகத்துள் பெய்து வைத்த பருத்திக் காயினை உணர்த்திற்று; என்னை? விளையாடற் பொருட்டுக் கழற்காயினையும் புன்னை கமுகு முதலியவற்றின் காயினையும் அவைபோல்வன பிறவற்றையும் கொண்டாற்போலப் பருத்திக் காயினையும் சிறாஅர் கோடல் வழக்கு ஆதலானும், அக்காய் வெளிப்புறம் கிடப்பின் காற்றான் உலர்ந்தாயினும் வெயிலால் காய்ந்தாயினும் வெடித்தலின் விளையாடற்கு ஆகாமையும், நீருள் கிடப்பின் சின்னாட்களுக்குப் பயன்படலும் உடைமையின், நீர் வறிது அறியாக் கரகம் என்னும் குண்டிகையுள் அவர் பெய்து வைத்தல் வழக்காதலானும் என்பது. நன்னூலார் முதலாயினார் குண்டிகைப்பருத்தி என்பதனைப் பருத்திக் குண்டிகை என மாற்றி, பஞ்சு அடைக்கப்பட்டதாகிய மிகச் சிறிய வாயினை உடைய நீர் அற்ற குடுக்கை என்று பொருள் கொண்டுள்ளனர். குண்டிகை என்பது குடுக்கையை உணர்த்தாது வாயகன்ற கரகத்தையே உணர்த்தலானும், குண்டிகைப்பருத்தி என்பது தொடரன்றிப் பருத்திக் குண்டிகை என்பது தொடராக மாற்றி நூற்பாவுள் அமைக்கப்படாமையானும், குடுக்கையுள் அடைக்கப்படுவது இலவம் பஞ்சேயன்றிப் பருத்திப் பஞ்சு அன்மையானும் அவர்கள் கூறுவது பொருந்து மாறில்லை. இனி, மாறன் அலங்கார நூலாசிரியர் கற்கப்படுவோர் கற்கப்படாதோர் பற்றிக் கூறுவனவற்றை நோக்குவாம். |