பக்கம் எண் :

13

நன்னூலாரைப் பின்பற்றியே இவ்வாசிரியர், ஆசிரியர் அல்லாதார் இயல்பினைக் குறிப்பிட்டுள்ளார். இனி, உரையாசிரியர், கற்கப்படாதோருக்குக் ‘கழற் பெய்குடமே மடற்பனை முடத்தெங்கு குண்டிகைப் பருத்தியோடு இவையென மொழிப’ என நான்கு உவமங்கள் கூறியுள்ளார்.

நச்சினார்க்கினியர் இவற்றிற்கு விளக்கமும் தந்துள்ளார்:

கழற்பெய் குடமாவது கொள்வோன் உணர்வு சிறிது ஆயினும், தான் கற்றது எல்லாம் ஒருங்கு உரைத்தல்;

மடற்பனை என்பது பிறரால் கிட்டுதற்கு அரியதாகி இனிதாகிய பயன்களைக் கொண்டிருத்தல்; முடத்தெங்கு என்பது ஒருவர் நீர்வார்க்கப் பிறருக்குப் பயன்படுவது போல, ஒருவர் வழிபடப் பிறருக்கு உரைத்தல். குண்டிகைப் பருத்தி என்பது சொரியினும் வீழாது சிறிது சிறிதாக வாங்கக் கொடுக்குமதுபோல, கொள்வோன் உணர்வு பெரிதாயினும் சிறிதுசிறிதாகக் கூறுதல்-என்றார்.

சண்முகனார் இவற்றிற்கு வேறுபொருள் கண்டார். அவர் உரைத்துள்ள செய்திச் சுருக்கம் பின்வருமாறு:

கழற்பெய் குடமாவது விளையாட்டுச் சிறாஅர் கழற்சிக் காயைப் பெய்துவைக்கும் கலசத்தை உணர்த்திற்று; வழக்கு மிகுதிபற்றி. மடற்பனை என்பது, மடலென வேறு காட்டாமல் அம்மடலின்கண் காய்த்தலையுடைய ஏனைப் பெண்பனையாய இனத்தைச் சுட்டி, அதனினின்றும் விலக்கிக் காய்த்தல் இன்மையின் வோறகக் காணப்படும் மடலுடைய ஆண்பனையை உணர்த்திற்று; மடல் என்பது பாளைக்குப் பெயரன்றி ஓலைக்குப் பெயர் ஆகாமையின், நன்னூலார் முதலாயினார் கூறுவதுபோல ஓலையை யடக்கிய மட்டையைக் குறிப்பதன்று.