442 ‘துன்னுதல் கடிந்த தொடாக் காஞ்சி’ தொல். பொருள் ‘புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கம்’ தொல். பொருள் ‘வாடா வஞ்சி வயவர் ஏத்திய’ தொல். பொருள் முதலாகவும் செய்யா என்றும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சமே காணப்படுவதலானும், சங்க காலத்துக்கு பிற்பட்ட திருக்குறளிலேயே ‘உளவரை தூக்காத ஒப்புர வாண்மை’ குறள் 480 ‘இனத்தாற்றி எண்ணாத வேந்தன்’ குறள் 568 முதலாக அகரஈற்று எதிர்மறைப் பெயரெச்சம் அருகிக் காணப்படுதலானும், செய்யா என்பது இயற்கை ஆகார ஈற்றுப் பெயரெச்சமாகச் செய்யாத என்பது விதி அகர ஈற்று எதிர்மறைப் பெயரெச்சமாகக் கோடலே இவ்ஆசிரியர் கருத்தாதல் அறிக. இதனைத் தொல்காப்பியம் 222ஆம் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையானும் உய்த்து உணர்க. எனா என்ற ஆகார ஈற்று இடைச் சொற்கள் அளபெடை அகரம் செய்யுள் இசை நிறைக்கவந்தது ஆதலின், எனா என்ற இயற்கை ஆகார ஈற்று இடைச்சொல்லையே ஆசிரியர் குறிப்பிட்டாராகக் கொள்க. உசா, உயா, வயா - என்பன உரிச்சொல் ‘உயாவே உயங்கல்’ தொல். சொல். 369. ‘வயாஎன் கிளவி வேட்கைப் பெருக்கம்’ தொல். சொல். 371 இகரஈற்று அல்வழி முடிபு ‘வேற்றமை அல்வழி இ ஐ என்னும்’ (இ வி.77) என்ற நூற்பாவில் கூறப்பட்டது. |