49 கற்றலின் ஒரு பகுதி ஆயினும் அதுவே கற்றல் எனப் பெயர் பெறாமையானும், அது கல்லாதார்க்கும் உரித்தாம் ஆகலானும், ஒரு குறி கேட்போன் இருகால் கேட்பின், முக்கால் கேட்பின் என்ற இடத்துக் கற்றலின் பொது இயல்பு கூறாமல் அதன் பகுதியாகிய கேட்டல் இயல்பே கூறலான் அதுகொண்டு கற்போர் எனல் பொருந்தாமையானும், ஈவோன் தன்மை கொள்வோன் தன்மை என்றாற் போலக் கேட்போன் தன்மை என ஒருமையாற் கூறாது கேட்போர் எனப் பன்மையாற் கூறலானும், மாணாக்கன் தன்மை பொதுப்பாயிரத்திலேயே விளங்கக் கூறப்பட்டிருத்தலானும், ஈண்டுக் கூறுவது மாணாக்கன் சிறப்பியல்பு எனின் ஆசிரியன் சிறப்பியல்பும் கூறப்படல் வேண்டும் ஆகலானும், நூல் இயற்றப்பட்ட பின்னரே அஃது அரங்கேற்றப்படும் ஆதலின், நூல் இயற்றப்பட்ட காலத்துக்கு அரங்கேற்றக் காலம் எதிரதே ஆதலின் கேட்போர் என எதிர்காலத்தால் கூறியதன் கண்தமிழ் மரபுக்கு மாறான கருத்து இன்று ஆகலானும். இங்ஙனமே திருவள்ளுவனாரும் நோயுற்றவன் பின் அடையும் மருத்துவன் முதலாயினாரை; “உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து’. (குறல் - 950) என இறந்தகாலம் எதிர்காலம் பற்றிக் கூறினார் ஆகலானும் முனிவர் முதலாயினோர் தரும் விளக்கம் பொருந்தாது என்பது. மேலும் இலக்கணம் என்பது ஒருதலையாகக் துணிதல் ஆகலான் முனிவர் யாப்பு என்பதற்கு ஒருதலையாகப் பொருள் துணியாராய் ஆனந்தரியம், சம்பந்தம் என இருதலைப்படப் பொருள்கூற முற்படுதல் பொருந்தாமையானும் அவர் உரை பொருந்தாமை தெளியப்படும் என்பது”. |