பக்கம் எண் :

560

மின்முதலியவற்றின் நாற்கணம்

127 மின்பின் பன்கன் தொழிற்பெயர் அனைய
வேற்றுமை ஆயின் கன்அ-ஏற்று
வல்லெழுத்துப் பெறுதல் வரைநிலை இன்றே
பொருளொடு புணரும் காலை யான.

இது னகரஈற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதிவகுக்கின்றது.

(இ-ள்.) மின்னும் பின்னும் பன்னும் கன்னும் ஆகிய இந்நான்கு சொல்லும் இருவழியும் னகரஈற்றுத் தொழிற்பெயர்போல உகரம்பெற்று முடியும், வேற்றுமைப்பொருள் புணர்ச்சியாயின் அவற்றுள் கன்என்னும் சொல் அகரம் பெற்று வல்லெழுத்து மிக்கு முடிதலை நீக்கும் நிலை இன்று, பொருட்பெயரொடு புணருங்காலத்து என்றவாறு.

வரலாறு: மின்னுக்கடிது பின்னுக்கடிது பன்னுக்கடிது கன்னுக்கடிது - சிறிது-தீது- பெரிது-ஞான்றது-நீண்டது-மாண்டது-வலிது எனவும்

கடுமை-சிறுமை-தீமை-பெருமை-ஞாற்சி-நீட்சி- மாட்சி- வலிமை எனவும்.

கன்னக்குடம்-சாடி-தூதை-பானை எனவும் வரும்.

‘இயல்பினும் விதியினும்’ (82) என்பதனான் வல்லெழுத்துப் பெறுமேனும்,

‘வல்லெழுத்துப் பெறுதல் வரைநிலை இன்று’

என வேண்டா கூறிய அதனால் குணத்தொடு புணரும் காலத்தும் சிறுபான்மை கன்னக்கடுமை என அகரமும் வல்லெழுத்தும் பெற்றுமுடிதலும், கன்னங்கடுமை என அகரமும் மெல்லெழுத்தும் பெற்று முடிதலும்,