561 அல்வழிக்கண்ணும் கன்னங்கடிது என அகரமும் மெல்லெழுத்தும் பெற்று முடிதலும் கன்னஞாற்சி-நீட்சி-மாட்சி-வலிமை எனவும் ஞான்றது-நீண்டது-மாண்டது-வலிது எனவும் இருவழியும் மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வந்துழியும் அகரம் பெற்று முடிதலும் கொள்க. ‘பொருளொடு புணருங்காலை’ அகரம் பெற்றுமுடியும் எனவே, வேற்றுமைக்கண் கன் உகரம்பெற்று முடிதல் குணத்தொடு புணருங்காலை என்பதூஉம் பெற்றாம். தொழில்நிலைக்கண் அன்றி வேறுபொருள் உணர நின்ற வழியும் இம்முடிபு எய்தும் என்பார் ‘தொழிற்பெயர் அனைய’ என்றார். மின் மின்னுதல் தொழிலும், ‘மின்னு நிமிர்ந்தன்ன’ (புறநா. 57-8) என்புழி ஒருபொருளும் உணர்த்தும். பிறவும் அன்ன. ‘பொன்னகர் வரைப்பின் கன்னந்தூக்கி’ (ஐங். 247) என்பது மகர ஈற்றுப் பொருட்பெயர். விளக்கம் எய்தியது விலக்குதல்-பொதுவிதியான் (119) னகரம் றகரமாதலை விலக்குதல். பிறிதுவிதி-தொரிற்பெயர் போல யகரம் அல்லாத மெய் வருமொழி முதலில் வரின் உகரம் பெறுதலும், வன்கணமாயின் உகரத்தோடு வல்லெழுத்துப் பெறுதலும் வேற்றுமைக்கண் அகரச்சாரியையோடு வருமொழி வல்லெழுத்தோ இனமெல்லெழுத்தோ பெறுதலும் பிறவுமாம். |