‘ஏற்கும்’ எனவே, ஏலாதனவும் உள ஆயின. அவை மேலே கூறுப. ‘எவ்வகைப் பெயர்க்கும்’ என்றதனானே, உயர்திணைப் பெயரும். அஃறிணைப்பெயரும், விரவுப்பெயரும், வினைப்பெயரும், யானைக்கோடு-மதிமுகம்- கொடியானை- கருங்குதிரை- உவாஅப்பதினான்கு- பொற்றொடி என்றாற்போலப்பெயரொடு பெயர் தொக்கனவும், பெயர்த்தன்மை எய்தி நின்ற இடைச்சொல்லும், உரிச்சொல்லும் ஆகிய எல்லாப் பெயரும் கொள்க. ‘ஈறாய்’ எனப் பொதுப்படக் கூறினாரேனும், ‘இக்காட்டுள் புக்கார் எல்லாரும் கூறை கோட்பட்டார்’ என்றவழிக்கூறை கோட்படுதல் கடவுளரைஒழித்து ஏனையோர் மேற்று ஆயினாற்போலப் பெயர் வேற்றுமை பெயர்க்கு ஈறு ஆதலை ஒழித்து ஏனை வேற்றுமைகளின் மேற்றாம் எனவும் அவ்விடைச்சொல் விகுதிஇடைச்சொல் போல உறுப்பு ஆகாது தாம் என வேறு உணரப்பட்டுச் சாத்தனை சாத்தனால்- சாத்தற்கு- சாத்தனின்- சாத்தனது- சாத்தன்கண் என இறுதி நிற்கும் எனவும் கொள்க. செயப்படுபொருள் முதலியனவாகப் பெயர்ப்பொருள் வேறுபடுத்து உணர்த்தலின் வேற்றுமை ஆயின. செயப்படுபொருள் முதலியவற்றின் வேறுபடுத்துப் பொருள் மாத்திரம் உணர்த்தலின் எழுவாயும் வேற்றுமை ஆயிற்று. பிறிது ஓர் இடைச்சொல்லை ஏலாது தானே திரிந்தும் இயல்பாயும் நிற்கும் பெயரது இறுதி விளி என்பார் ‘விளி கொள்வதன்கண் விளி’ என்றார். எனவே, விளி என்ற பெயரும் அன்று, அதனின் வேறும் அன்று ஆயிற்று. ‘ஏழ் என மொழிப’ எனப் பிறர்மதம் கூறி, விளியொடு கூட எட்டு எனத் தம் துணிபு உரைத்தார். |