மேல் ‘வேற்றுமைக்கு இடனாய்’ எனப்பெயர்க்கு இலக்கணமாகக் கூறிப் போந்த வேற்றுமைகளை விரித்துக் கூறுவான் தொடங்கினவற்றுள், இஃது அவை நிற்கும் இடனும் அவற்றின் பொது இலக்கணமும் அவை இத்துணைய என்பதூஉம் உணர்த்துகின்றது. இ-ள்: தம்மை ஏற்றுக் கோடற்கு உரிய எப்பகுதிப்பட்ட பெயர்க்கும் இறுதிக்கண்ணவாய்ப் பெயர்ப்பொருளை வேறுபடுத்தும் வேற்றுமைகள் ஏழாம் என்று கூறுவர், விளி ஏற்கும் பெயர்க்கண்ணது ஆகிய விளியொடு கூடாத இடத்து; அதனொடு கூட எட்டு என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |