சேனாவரையர் கருத்தை உட்கொண்டவர் இவர், சிறப்புப்பற்றி ஆகுபெயருள் ஒருகூறாகிய அன்மொழித்தொகையை விதந்து கூறியது வேற்றுமைச்சொற்களாகிய இடைச் சொற்களுள் ஒரு சாரனவற்றை விதந்து வேற்றுமை எனக் கூறியது போலும். கனங்குழை என்பதனை ஆகுபெயர் என்ற பரிமேலழகர் ‘தொடலைக் குறுந்தொடி’ என்பதனை அன்மொழித்தொகை என்றார் ஆதலின், அவர்க்கு ஆகுபெயரும் அன்மொழியும் ஒன்று என்ற கருத்து இன்று என்பதும் காண்க. ‘மக்கட்சுட்டு மக்களாகிய சுட்டு என இருபெயரொட்டுப்பண்புத்தொகை. சுட்டு - நன்குமதிப்பு. அஃது ஆகுபெயராய் மக்கட்பொருளை உணர்த்தி நின்றது. எனவே மக்கள் சுட்டு என்பது இருபெயரொட்டாகுபெயர்’ என்ற நச்சினார்க்கினியர் கருத்தை அடியொற்றி முனிவர் விளக்கி, அவர் கருத்தை உள்ளவாறு உணராத இவ்வாசிரியர் கூற்றினை மறுப்பது ஏற்புடைத்து. |