இவனின் இலன் இவன் என இன்மை பற்றியும், இவனின் உடையன் இவன் என உடைமை பற்றியும், இதனின் நாறும் இதுஎன நாற்றம் பற்றியும், இதனின் பல இவை என பன்மைபற்றியும், இதனின் சில இவை எனச் சின்மைன் பற்றியும் வருவன போல்வன எல்லாம் பொரூஉ. இவற்றிற்கு இருவகைப் பொரூஉவும் விரிக்க.வண்ணம்- வெண்மை கருமை முதலாயின; வடிவும்- வட்டம் சதுரம் முதலாயின; அளவு- நெடுமை குறுமை முதலாயின; சுவை- கைப்பு புளிப்பு முதலாயின; நாற்றம்- நறுநாற்றம் தீநாற்றம் என்பன. கருவூரின் கிழக்கு இது, இதனின் ஊங்கு இது என்பன போல்வன எல்லை. கள்ளரின் அஞ்சும் இவன், வரணிகத்தின் ஆயினான் இவன், ‘கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்’ பொருந- 163, என்பன போல்வன ஏது. அவனின் அணியன் இவன், அதனின் சேய்த்து இது, இகழ்ச்சியின் கெட்டான், மகிழ்ச்சியின் மைந்துற்றான் என வருவன போல்வன பிறவும் அன்ன. இத்திறத்தன எல்லாம் ‘இதனின் இற்று இது’ என வந்தவாறு கண்டு கொள்க. காக்கையின் கரிதுகளம்பழம் என்றவழி இதனின் என்பது காக்கையின் என்பது; இற்று என்பது கரிது என்பது; இது என்பது களம்பழம் என்பது. பிறவும் அன்ன. இவ்வுதாரணங்களுள் இற்று என்னும் வினைக் குறிப்பான் அன்றிப் பிறவாய்பாட்டான் வந்தனவும் அப்பொருள்பட நிற்றலான் இற்று என்றலேயாம் என்பது. அவ்வாறே இல் உருபோடும் ஒட்டுக. |