இ-ள்: ஐந்தாம் எண்ணுமுறைமைக்கண் நின்ற வேற்றுமைக்கு உருபு இன்னும் இல்லும் ஆகிய இரண்டுமாம்; நீக்கமும் பொரூஉவும் எல்லையும் ஏதுவும் ஆகிய நால்வகைப் பொருண்மைக்கண்ணும் இப்பொருளின் இத்தன்மைத்தாய் இருக்கும் இப்பொருள் என்னும் பொருண்மைத்தாய் வருதல் அதன் பொருளாம் என்றவாறு. எ-டு: ஊரின் நீங்கினான் ஓணன், தமரின் தீர்ந்தான் சாத்தன், வரையின் வீழ் அருவி, |
காமத்தின் பற்றுவிட்டான் காவலன்- என்பன போல்வன நீக்கம்.பொரூஉ உறழ்பொரூஉவும் உவமப்பொரூஉவும் என இரு வகைப்படும். உறழ்தல் ஒன்றின் ஒன்றை மிகுத்தல். காக்கையின் கரிது களம்பழம் என வண்ணம் பற்றியும், இதனின் வட்டம் இது எனவடிவு பற்றியும், இதனின் நெடிது இது என அளவு பற்றியும், இதனின் தீவிது இது எனச் சுவை பற்றியும், இதனின் தண்ணிது இது எனத் தன்மை பற்றியும். இதனின் வெய்து இது என வெம்மை பற்றியும், இதனின் நன்று இது என நன்மை பற்றியும், இதனின் தீது இது எனத் தீமை பற்றியும், இதனின் சிறிது இது எனச் சிறுமை பற்றியும், இதனின் பெரிது இது எனப் பெருமை பற்றியும், இதனின் வலிது இது என வலிமை பற்றியும், இதனின் மெலிது இது என மென்மை பற்றியும், இதனின் கடிது இது எனக் கடுமை பற்றியும், இதனின் முதிது இது என முதுமை பற்றியும், இதனின் இளைது இது என இளமை பற்றியும் இதனின் சிறந்தது இது எனச் சிறப்புப்பற்றியும், இதனின் இழிந்தது இது என இழிவு பற்றியும், இதனின் புதிது இது எனப் புதுமை பற்றியும், இதனின் பழைது இது எனப் பழைமைபற்றியும், |