சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-2267

வரலாறு: நடந்தான் நடக்கின்றான்- நடப்பான்- எனவும், நடப்பித்தான்-
நடப்பியாநின்றான்- நடப்பிப்பான்- எனவும், தெரிநிலைவினையின் முதல்நிலைகளானும்,
கச்சினன்- கழலினன்- எனவும், இல்லத்தன்- புறத்தன் எனவும், மூவாட்டையான்-
ஐயாட்டையான் எனவும், கண்ணன்- தோளன்- எனவும், கரியன்- செய்யன்- எனவும்,
துணங்கையன்- கூத்தன்- எனவும், குறிப்பு வினையின் முதல்நிலைகளானும்
தோன்றியவாறு காண்க.

பொன்னன்னன்- புலிபோல்வான் என ஒப்பு உணர்த்துவனவும்,

எப்பொருளும் அல்லன் இறைவன் எனப் பண்பு உணர்த்தியும், அவைதாம் இவை
அல்ல எனக் குறிப்பு உணர்த்தியும், எவ்வுயிர்க்கண்ணும் இறைவன் உளன் எனப் பண்பு
உணர்த்தியும்,
 

  மாற்றருந் துப்பின், மாற்றோர் பாசறை உளன்’

புறம். 309


எனக்குறிப்பு உணர்த்தியும், பொய்யர் நெஞ்சின் புனிதன் இலன் எனப் பண்பு
உணர்த்தியும், மாற்றோர் பாசறை இலன் எனக் குறிப்பு உணர்த்தியும், குழையிலன்
கச்சிலன் என உடைமைக்கு மறையாயும், மெய்வலியன் எனப் பண்பு உணர்த்தியும்,
சொல்வல்லன் எனக் குறிப்பு உணர்த்தியும் வருவனவும், நல்லன்-தீயன்- உடையன்- என
வருவனவும், இவை போல்வன பிறவும் ஈண்டுக் குணத்தின் பகுதியாயே அடங்கும்
எனக் கொள்க. ஏனைத்திணைபால் இடங்கள்தொறும் ஏற்குமாறு ஒட்டுக.

உண்மையாவது பொருள்கட்குக்கேடு பிறந்தக்காலும் தனக்குக் கேடு இன்றித் தான்
ஒன்றேயாய்ப் பலவகைப்பட்ட பொருள்தொறும் நிற்பது. பண்பாவது ஒரு பொருள்
தோன்றும் காலத்து உடன் தோன்றி, அது கெடும் துணையும் நிற்பது. குறிப்பாவது ஒரு
பொருட்குப் பின் தோன்றிச் சிறிது பொழுது நிகழ்வது. 2