இது முற்கூறிப்போந்த வினைச்சொற்கள்தாம் இத்துணைப் பகுதிய என்கின்றது. இ-ள்: வேற்றுமை கொள்ளாது வெளிப்படையானும் குறிப்பானும் காலமொடு தோன்றி அங்ஙனம் தோன்றுங்கால் நட வாமுதலிய முதல்நிலை அடியாகத்தோன்றிப் பொருளது புடைபெயர்ச்சியை விளக்கி நிற்கும் என மேல்கூறிப்போந்த வினைச்சொற்கள்தாம், முற்றுவினைச்சொல்லும் பெயரெச்சவினைச்சொல்லும் வினையெச்சவினைச்சொல்லும் என மூன்று திறத்தவாய், இருதிணை ஐம்பால் மூவிடங்களுள் ஒன்றற்கு உரியனவும் பலவற்றிற்கு உரியனவும் ஆகி வரும் என்றவாறு. முற்றுச்சொற்கும் எச்சத்திற்கும் வேற்றுமை யாதோ எனின், பிறிது ஒருசொல்லொடு இயையாது தாமே தொடர் ஆதற்கு ஏற்கும் வினைச்சொல் முற்றாம்; பிறிது ஒரு சொல் பற்றி அல்லது நிற்றல் ஆற்றா வினைச்சொல் எச்சமாம். இவை தம்முள் வேற்றுமை என்க. அஃதேல், உண்டான் என்பது சாத்தன் என்னும் சொல் அவாவியன்றே நிற்பது? தாமேதொடர்ஆம் என்றது என்னை எனின் அற்றன்று; உண்டான் சாத்தன் என்றவழி எத்தை என்னும் அவாய்நிலைக்கண் சோற்றை என்பது வந்து இயைந்தாற்போல, உண்டான் |