ஐம்பாலவாகிய வினைமுதலைத் தரும் விகுதிஉறுப்புக் குறைந்த குறைச்சொல் ஆகிய எச்சங்களைப் போலாது, அவ்வுறுப்போடு கூடி நிறைந்து நின்று பெயரன்றி வினைச்சொல் முதலியவற்றுள் ஒன்றனையும் ஏலாது பெயர்ப்பின் வேறு ஒன்றனையும் ஏலாது நிற்பன வினைமுற்றாம். (நன்.323-விருத்தியுரை) செய்கையும் பாலும் காலமும் செயப்படுபொருளும் தோன்றி நிற்றலின் முற்றுச்சொல் என்பாரும், மற்றொரு சொல் நோக்காது முடிந்து நிற்றலின் முற்றுச்சொல் என்பாரும், எக்கால் அவை எச்சம் பெற்று நின்றன அக்கால் பின்யாதும் நோக்காவாய்ச் செப்பு மூயிற்றுப்போல அமைந்து மாறுதலின் முற்றுச்சொல் என்பாரும் என இப்பகுதியர் ஆசிரியர் என்பது. (தொல்.சொல். 421.உரை) |